ETV Bharat / sitara

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு மோசமான விமர்சனம் - ப்ளூ சட்டை மாறனுக்கு சாவல் விட்ட இயக்குநர்

author img

By

Published : Oct 3, 2020, 4:36 PM IST

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'க/பெ.ரணசிங்கம்' படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு படத்தின் இயக்குநர் சவால் விடுத்துள்ளார்.

விருமாண்டி
விருமாண்டி

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், நேற்று (அக்டோபர் 2) ஓடிடியில் வெளியான படம் 'க/பெ. ரணசிங்கம்'. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையில், யூடியூப் விமர்சகரான 'ப்ளூ சட்டை மாறன்' இந்த படம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என தெரிகிறது. அந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில் படத்தின் இயக்குநர் விருமாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படக்குழுவினரின் அறிக்கை
இயக்குநர் விருமாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை
படக்குழுவினரின் அறிக்கை
இயக்குநர் விருமாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை

அதில் கூறப்பட்டுள்ளதாவது, "உலகின் ஆகச்சிறந்த அறிவாளி அண்ணன் நீல சட்டை மாறன் அவர்களுக்கு, நாங்கள் எடுத்துக்கொண்ட கதை என்ன என்பதை புரிந்து கொள்ளும் பேராற்றல் படைத்த மகா விஞ்ஞானியான தங்களுக்கு நாங்கள் திரைக்கதையாகவும், காட்சியாகவும் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தங்களின் பெருமூளை மழுங்கி மட்டையாகி போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.

ஒரு பெண் தன் கணவன் மீது எவ்வளவு பெருங்காதல் கொண்டிருப்பாள் என்பதை ஒருசில வார்த்தைகளால் உங்களைப்போல அதிமேதாவித்தனமாக பேசிப்புரியவைக்க முடியாமல், சில காதல் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு உணர வைக்க முயன்றதற்கு வருந்துகிறோம்.

மேலும் காதல் காட்சிகளின் ஊடே கதாநாயகன் என்ன காரணத்திற்காக நீரோட்டம் பார்க்கும் வேலையை செய்யும் விதமாக காட்சியமைத்திருக்கிறோம் என்பதும் உங்கள் கனமான தலையில் ஏன் ஏறவில்லை என்று புரியவில்லை.

அண்ணன் அவர்களே வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்று அரசுகளால் தீர்க்க முடியாத சிக்கல்களை முன்னிட்டே பல நம் இந்திய சொந்தங்கள் அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

இங்கு ஏன் வேலை இல்லை? எதனால் இல்லை? யாரால் இல்லை? என்று சற்று விரிவாகவே நாங்கள் பேசியுள்ளதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டு படம் பார்க்கும்போது குறட்டை விட்டு தூங்கியுள்ளீர்கள் என்பதை ரணசிங்கம் திரைப்படத்தை விமர்சனம் செய்து தாங்கள் வெளியிட்டுள்ள காணொலியில் சோர்வடைந்து இருக்கும் உங்கள் முகம் மூலம் உணர முடிகிறது.

என் கதைக்கு எதிராக நானே திரைக்கதை அமைத்து உள்ளேன் என கூறியிருக்கிறீர்கள். வயது ஏற ஏற மூளை தடுமாற்றம் ஏற்பட்டு சுயசிந்தனை தப்பி வருவது இயற்கை தான். பாவம் இந்த நிலைக்கு நீங்கள் வந்துவிட்டது கண்டு எங்கள் கண்கள் குளமானது.

நாங்கள் நாடகத்தனமாக படம் எடுத்ததற்கு மன்னிக்க வேண்டும். உங்களிடம் பயிற்சி பெற்று உலக தரமான படங்களை எடுக்க முயற்சிக்கிறோம். தைரியம் இருந்தால் நேரலை விவாதம் செய்யலாமா” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.