ETV Bharat / sitara

'நாமளும் ஒரு நாள் திருப்பி அடிப்போம்' #OneYearOfPariyerumPerumal

author img

By

Published : Sep 29, 2019, 3:51 PM IST

'நீயெல்லாம் Law படிச்சி என்ன பண்ண போற, கோட் சூட் போட்டுட்டு மாடு மேய்க்கப் போறியா? கோட்டால வந்த கோழிக்குஞ்சி..'  என்று கல்லூரி ஆசிரியர் முதல் முகத்தில் சிறுநீர் கழிக்கும் சக வகுப்பு மாணவன் வரை  பலராலும் அவமானப்படுத்தப்பட்டு, இறுதியில் கல்விதான் தனக்கான ஆயுதம் என உணர்ந்து அனைவரையும் ஒரு உரையாடலுக்கு அழைத்த பரியன், 'பரியேறும் பெருமாள்' ஆக வெளிவந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமா தொடர்ந்து புறக்கணித்து வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்து கதாப்பாத்திரங்களை மீட்டெடுத்து 'தலித் சினிமா' என்ற தனிப்பட்டியலுக்குள் இணைந்தவர்கள் பா. ரஞ்சித், சுசீந்திரன், விஜய், கோபி நயினார், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள்.

அதில் மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்வியலையும், அவனைச் சுற்றி இருக்கிற சமூகத்தையும், சாதி ஆதிக்கத்தையும் அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. படத்தின் பெயரையே தாங்கி நிற்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த கதிர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருந்தார்.

கருப்பியுடன் பரியன்
கருப்பியுடன் பரியன்

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் சமூகத்தில் பரவிக் கிடக்கும் சாதிய ஆதிக்கத்தையும், சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளையும், அடக்குமுறைகளையும், வன்முறைகளையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கும்.

தாமிரபரணி படுகொலையில் கொல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை
தாமிரபரணி படுகொலையில் கொல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை

படத்தின் ஆரம்பக் காட்சியில் கொலை செய்யப்படும் கறுப்பி, புளியங்குளத்து இளைஞர்கள் குளித்துச் சென்ற குளத்தில் சிறுநீர் கழிக்கும் ஆதிக்க சாதி இளைஞர்கள், வா உ சி, பெரியார், எம்ஜிஆர் போன்ற தலைவர்களின் சிலைகள் மட்டும் சுதந்திரமாக வெளியே இருக்க, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர், முத்துராமலிங்கர் போன்ற தலைவர்கள், 'கோட்டா' என்ற ஒற்றைச் சொல்லில் இருக்கும் ஆதிக்கம், தொடர்ந்து நிகழும் ஆணவக் கொலைகள், நவீன தீண்டாமையாய் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் இரட்டைக் குவளை முறையும் தடுப்புச் சுவரும், நீதி கிடைக்காத தாமிரபரணி கொலைகளும், மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் நவீன தொழில்நுட்பம் இவை எல்லாமே - "இப்பலாம் யாருங்க ஜாதி பாக்குறா?" எனக் கேட்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் பெரிய சாட்டையடி.

கருப்பியை தொலைத்த பரியன்
கருப்பியை தொலைத்த பரியன்

திரைப்படத்தின் கதை, 2005இல் நடப்பதாக இருந்தாலும் படத்தின் சாதி வன்முறைக் காட்சிகள் அனைத்தும் இன்றளவும் நடக்கும் ஆணவக் கொலைகளுடனும், அம்பேத்கர் சிலை உடைப்பு போன்ற இன்றளவும் நடக்கிற சாதிவெறிச் சம்பவங்களுடன் ஒத்துப்போகின்றன. அம்பேத்கரின் 'நீல'க் கொள்கையும் படத்தின் முக்கிய குறியீடாக இருந்தது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் ஒரு சாராரிடம் இருந்தது.

நீல வண்ணம் பூசிய பரியன்
நீல வண்ணம் பூசிய பரியன்

படத்தில் ஒடுக்கப்பட்ட நாயகனை மட்டும் நல்லவனாக காண்பிக்காமல், அவனின் வகுப்புத் தோழியாக வரும் ஜோதி, "ஜாதி பாத்தா லே நான் பழகுறேன்" எனக்கேட்கும் ஆதிக்க சாதி நண்பன் ஆகியோரையும் நல்லவர்களாக காட்டியதில், அனைத்து சாராரின் பாராட்டைப் பெற்றுவிட்டார் மாரி செல்வராஜ்.

பரியனை காப்பாற்றும் கருப்பி
பரியனை காப்பாற்றும் கருப்பி

இந்தச் சமூகத்தில் மாற்றம் வரும், ஆனால் 'நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நான் நாயாதான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கற வரைக்கும்... இங்க எதுவுமே மாறாது' என்று வலி கடந்து, புது நம்பிக்கை பெற்ற பரியனின் கண்களின் வழியே, சமமாக நிற்கும் இரு தேனீர்க் கோப்பைகளுக்கு நடுவே பார்வையாளனை உரையாடலுக்கு அழைக்கும் திரைப்படம்தான் இந்த 'பரியேறும் பெருமாள்'. இப்படத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடி, படக்குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இதையும் படிங்க:#5YearsOfMadras - கல்விதான் நமக்கான அதிகாரத்தை பெற்றுத் தரும்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.