ETV Bharat / sitara

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இரண்டு வாரத்துக்குள் சிவில் நீதிமன்றத்தில் முடிக்க உத்தரவு

author img

By

Published : Feb 28, 2020, 7:10 PM IST

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இடையேயான இடவிவகாரம் தொடர்பான வழக்கு சமரச தீர்வு மையத்துக்கு மாற்றப்பட்டு அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்ற நிலையில், இந்த வழக்கை சிவில் நீதிமன்றத்தில் வைத்து முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC order on Ilaiyaraja - Prasad studio row
Ilaiyaraja - Prasad studio row

சென்னை: பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து தன்னை வெளியேற்றக்கூடாது என்று இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து முடிக்குமாறு கீழ் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதையடுத்து பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமரச மையத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாற்பது வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா பணியாற்றி வந்துள்ள நிலையில் மேலும் சில நாட்கள் அங்கு அவர் தனது பணியை தொடர்வதில் பிரச்னை இருக்காது என நம்புவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இரண்டு வாரத்துக்குள் முடித்து உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் தீர்ப்பளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.