ETV Bharat / sitara

'1000 முத்தங்கள் லிங்கு' - கன்னத்தை நனைத்த எச்சிலாய் வசந்தபாலனின் கவிதை

author img

By

Published : May 15, 2021, 8:04 PM IST

"மெல்ல என் படுக்கையை ஒட்டி ஒரு உருவம் நின்றபடியே எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது. ஆண்பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது. மருத்துவரா? இல்லை... செவிலியரா என்று எனக்கு வித்தியாசம் தெரியவில்லை" என இயக்குநர் லிங்குசாமிக்காக வசந்தபாலன் எழுதிய கவிதை இன்னும் நீண்டு நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

'1000 முத்தங்கள் லிங்கு' - கன்னத்தை நனைத்த எச்சிலாய் வசந்தபாலனின் கவிதை
'1000 முத்தங்கள் லிங்கு' - கன்னத்தை நனைத்த எச்சிலாய் வசந்தபாலனின் கவிதை

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகியப் படங்களை இயக்கியவர், இயக்குநர் வசந்தபாலன். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி இவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் சென்றால், அவர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இயக்குநர் வசந்தபாலனை சந்தித்தே தீர வேண்டும் என மருத்துவமனை வாசலில் ஒற்றைக்காலில் நின்றார், இயக்குநர் லிங்குசாமி. லிங்குசாமியின் பேரன்பாலும் பிடிவாதத்தாலும் பிபிஇ ஆடையுடன், அவர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்பு படுக்கையில் இருந்த வசந்தபாலனை சந்தித்து நம்பிக்கையூட்டினார். இந்நிலையில் தற்போது கரோனாவிலிருந்து மீண்டுள்ள வசந்தபாலன், லிங்குசாமியின் மீது இருக்கும் பேரன்பை வெளிப்படுத்தும் விதமாக கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு,

”வீரம் என்றால் என்ன ?

பயமில்லாத மாதிரி நடிக்கிறது.

பழைய வசனம்.

வீரம் என்றால் என்ன தெரியுமா ?

பேரன்பின் மிகுதியில்

நெருக்கடியான நேரத்தில்

அன்பானவர்கள் பக்கம் நிற்பது

புதிய வசனம்

போன வாரத்தில்

மருத்துவமனையின்

தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று

இரவு முழுக்க நித்திரையின்றி

இரவு மிருகமாய்

உழண்டவண்ணம் இருக்கிறது

விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்

மருத்துவமனைத் தேடி விரைகிறது

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென

மருத்துவமனை நிர்வாகத்திடம்

போராடுகிறது

தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப்

பார்க்க அனுமதிக்க இயலாது என்று

மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது

இடையறாது சண்டக்கோழியாய்

போராடுகிறது

உங்களை அனுமதித்தால் உங்களுக்கு

தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது

பரவாயில்லை சில நிமிடங்கள்

அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது

வேறு வழியின்றி

முழு மருத்துவ உடைகளுடன்

அனுமதிக்கப்படுகிறது

மெல்ல என் படுக்கையை ஒட்டி

ஒரு உருவம் நின்றபடியே

எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.

ஆண்பென்குவின் போன்று

தோற்றமளிக்கிறது.

எனையே உற்றுப்பார்த்த வண்ணம்

இருக்கிறது

மருத்துவரா

இல்லை

செவிலியரா

என்று

எனக்கு வித்தியாசம் தெரியவில்லை

உள்ளிருந்து "டாக்டர்" என உச்சரிக்கிறேன்

"லிங்குசாமிடா" என்றது அந்த குரல்

அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி

மொத்த சக்தியையும் திரட்டி

"டே! நண்பா" என்று கத்தினேன்

"பாலா" என்றான்

அவன் குரல் உடைந்திருந்தது

வந்திருவடா…

"ம்" என்றேன்

என் உடலைத் தடவிக்கொடுத்தான்

எனக்காக பிரார்த்தனை செய்தான்

என் உடையாத கண்ணீர் பாறையிலிருந்து

ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.

தைரியமாக இரு

என்று என்னிடம் சொல்லிவிட்டு

செல்லும் போது

யாரிந்த தேவதூதன் என்று மனசு

அலட்டியது.

இந்த உயர்ந்த நட்புக்கு

நான் என்ன செய்தேன் என்று

மனம் முப்பது ஆண்டுகள்

முன்னே பின்னே ஓடியது.

"உனக்காக நான் மீண்டு வருவேன்

நண்பா….."

என்றேன்

நானிருக்கிறேன்

நாங்களிருக்கிறோம்

என்றபடி

ஒரு சாமி

என் அறையை விட்டு வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள்

எனை அணைத்தது போன்று இருந்தது.

ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..

ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..” என நெகிழ்ச்சியுடன் முடித்திருப்பார், வசந்தபாலன்.

தற்போது இந்த கவிதை வைரலாகி வருகிறது. தற்போதைய கரோனா சூழலில் தும்மினால் கூட தேசத்துரோகியாய் பார்க்கப்படும், இந்த நேரத்தில் கரோனா பாதிப்புடையவர் என்பது தெரிந்தும்; அவரைச் சந்திக்க லிங்குசாமி ஆர்வம் காட்டியது நட்பின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது.

நண்பர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கையும் அன்பும் எவ்வித பேராபத்தையும் தாண்டி நம்மை மீட்கும் என்பது இந்த கவிதையின் வெளிச்சம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.