ETV Bharat / sitara

மாஸுக்கு பாட்ஷா... க்ளாஸுக்கு படையப்பா...!

author img

By

Published : Apr 10, 2019, 6:03 PM IST

Updated : Apr 10, 2019, 9:26 PM IST

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் 'படையப்பா'. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் இருபது வருடங்கள் ஆகிறது. பெருமளவு ரசிகர்களை பெற்று தந்த இப்படம் பற்றிய சிறப்பு தொகுப்பு உங்களுக்காக...

படையப்பா

ரஜினியின்`படையப்பா' என்றாலே மவுத் ஆர்கன், காலர் இல்லாத ஷர்ட், என் வழி தனி வழி என்ற மாஸ் பஞ்ச் டயலாக் என ஒவ்வொன்றும் மனதில் இருந்து பட்டியலிட முடியும்.

அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஓப்பனிங் சாங்கான 'என் பேரு படையப்பா' இப்போதும் பட்டித்தொட்டி எங்கும் ஒளித்துக்கொண்டே இருக்கும். அதேபோல் 'வெற்றி கொடி கட்டு' சாங் மனம் துவண்டு போனவர்களுக்கு ஒரு எனர்ஜி பூஸ்ட்.

அதுவும் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே இப்படம் தான் எனது கடைசிப்படம் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என ரஜினி அறிவித்திருந்தது அப்போது திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் அவர் நடிக்க தொடங்கினார்.

இப்படி ஒரு அறிவிப்பை அடுத்து படையப்பா படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் கவுரவ வேடங்களில் தோன்றினா். இதனால் படையப்பா ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. ரஜினி படம் என்றுமே திருவிழாதான் ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரைத்துறையின் கடைநிலை ஊழியன் வரை என அனைவரும் கொண்டாடி மகிழ்வர்.

படையப்பா
படையப்பா

இப்படம் அனைவராலும் கொண்டாடப்படுவதற்கு வேற ஒரு காரணமும் உள்ளது. இப்படத்தில் ஓருவனின் முழு வாழ்க்கையை அழகாக கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதையாக அமைத்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் ரவுண்ட் நெக் டீஷர்ட் மேலே ஜீன்ஸ் ஷர்ட், வயதான கெட்டப்பில் வெள்ளை நிற பைஜாமா என படத்தில் ரஜினி பயன்படுத்திய அனைத்து உடைகளும் அந்த காலத்தில் பேஷனாகவே மாறின. சும்மா மாஸ் காட்டுவதிலும் ஸ்டைலிலும் தெறிக்கவிட்டுருப்பார் சூப்பர் ஸ்டார்.

மாஸ் ஹீரோ கதைகளில் எப்போதும் வில்லன்களுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். `பாட்ஷா'வில் ஆண்டனி தொடங்கி `தனி ஒருவன்' சித்தார்த் அபிமன்யூ வரை பல உதாரணங்கள் உள்ளன.

நீலாம்பரி

படையப்பா
படையப்பா - நீலாம்பரி

ஆனால், படையப்பாவில் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனை பயன்படுத்தாமல் வில்லியை பவர்புல்லாக இருக்கும்படி காட்சிப்படுத்தி இருப்பார். படத்தில் நிறைய கதாபாத்திரம் இருந்தும் நீலாம்பரி கதாபாத்திரம் பற்றி பேசக் காரணம் உண்டு. அந்த பாத்திரத்தின் கனம் அதிகம். நீலாம்பரி கதாபாத்திரத்தின் பலம் கருதி ஒரு கட்டத்தில் படத்திற்கு `நீலாம்பரி' என்றே பெயர் மாற்றிவிடலாமா என யோசித்தார்களாம் படக்குழுவினர். அந்த அளவுக்கு ரம்யா கிருஷ்ணன் சும்மா மாஸ் வில்லியாக விளையாடி இருப்பார் படத்தில்.

ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்த விதமும் அபாரமாக இருக்கும். மறக்க முடியாதபடி ஒரு கதாபாத்திரம், அதுவும் ரஜினி என்ற சூப்பர்ஸ்டாரின் படத்தில், ஹீரோவை சர்வசாதாரணமாக டீல் செய்யும் ரோல்.

படையப்பா
படையப்பா - நீலாம்பரி

பெண்கள் வில்லியாக இருந்தால் ஒரு அளவுதான் பயன்படுத்த முடியும் என்ற ஸ்டீரியோக்களை உடைத்து, புது வடிவம் அமைத்துக் கொடுத்தது நீலாம்பரி கதாபாத்திரம்.

படத்தின் இறுதியில் நீலாம்பரி "நீங்க என்னோட கண்ணத் திறந்திட்டீங்க" என்று கதறுவதையோ, "என் உயிரையே காப்பாத்திட்டீயே" என சென்டிமென்ட் பிழிவதையோ செய்யவில்லை. படத்தின் கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சௌந்தர்யாவை பற்றி கேட்கும் போது, `எப்படி இருக்கா என் வீட்டு வேலக்காரி?', ரஜினியை பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது `வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டுப் போகவே இல்ல' என்று ரசிப்பதிலும் நீலாம்பரியின் நடிப்பு சூப்பர். இளமையான தோற்றம், வயதான தோற்றம் என இரண்டிலுமே தனக்கான கம்பீரத்தில் மெர்சல் காட்டியிருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

படையப்பா - நீலாம்பரி

"குழந்தாய் உனக்கு என்ன வேணும்" என வந்தால் தெய்வீகம், போட்டுத்தாக்கு என ஸ்டெப் வைத்தால் மரண குத்து, "படையப்பாஆஆஆஆஆ" என்றால் ஆக்ரோஷ நீலாம்பரி, "இதுவே என் கட்டளை" என்றால் சிவகாமி என எந்த கதாபாத்திரமானாலும் ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு ஆபாரம்தான்.

நீலாம்பரி கதாபாத்திரம் எப்படி முறைக்கும், எப்படி நடக்கும், அதிகாரமாக சிரிக்கும் என சைகலாஜிகலாக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கு கே.எஸ். ரவிக்குமார் சாருக்கு பிக் சல்யூட்.

சிவாஜி

படையப்பா
படையப்பா - சிவாஜி

இந்த படத்தில் சிவாஜி சில நிமிட காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நடிப்பில் படைய கிளப்பி இருப்பார். ஒரு காட்சியில் நடிகர் திலகம் ரஜினியின் கன்னத்தை அன்போடு தடவி ‘தலையை லேசாக குனித்தபடி அது நீ இந்த ஸ்டைல்லா அப்படி ஒரு சல்யுட் போடுவியே! அப்படி போடு பார்க்கலாம்’ என்று கேட்பார், அப்போது நெற்றி முன் தலைமுடி விழ, ஸ்டைல்லாக ஒரு சல்யூட்டினை நம் சூப்பர் ஸ்டார் அடிக்க, 'அட யாரு மகன் இவன்...' என்ற பெருமையுடன் மீசையை மடக்கி சிவாஜி நடந்து செல்லும் காட்சி அவரின் நடிப்பிற்கு சிறு சான்று.

படையப்பா - சிவாஜி

தமிழ் சினிமாக்களிலேயே முதன்முறையாக இருநூறு தியேட்டர்களுக்கும் அதிகமாக ரிலீஸான படம் படையப்பா. அதோடு ஓப்பனிங் என்ற சொல்லுக்கே வித்திட்டது படையப்பாதான். கிட்டதட்ட 275 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், ரஜினிகாந்திற்கு "பாக்ஸ் ஆபீஸ் கிங்" என்ற பெயரை பெற்றுத் தந்தது.

அதுமட்டுமில்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா (மும்பை) என இந்தியாவின் 5 மாநிலங்களில் ஒரே தினத்தில் 100 நாட்கள் கொண்டாடப்பட்ட முதல் தென் இந்திய திரைப்படம் படையப்பாதான்.

அமெரிக்காவில் அதிக காட்சிகளாக வெளியிடப்பட்ட முதல் தமிழ் படமும் படையப்பாதான். வெளியான நாளில் இருந்தே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய படையப்பாவிற்கு கட்-அவுட், பேனர், பால் அபிஷேகம், பூமாலை என அமெரிக்கர்கள் வியக்கும் அளவிற்கு அந்நாட்டு ரஜினி ரசிகர்கள் அன்றே அசத்தி விட்டனர்.

படையப்பா
படையப்பா - அமெரிக்கா

ட்ரெண்ட் செட் ஸ்டைலில் படையப்பா வழி எப்போதும் தனி வழி தான்...!

Intro:Body:

20 years of padayappa trending in social media


Conclusion:
Last Updated : Apr 10, 2019, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.