ETV Bharat / opinion

அன்னமிடும் கைகளுக்கு அவல விலங்கு

author img

By

Published : Dec 23, 2020, 9:47 AM IST

Updated : Dec 23, 2020, 9:58 AM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்களுக்கும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்கிறார் புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான (ஓய்வு) டி. நரசிம்ம ரெட்டி.

Annadaata thrown into a larger crisis
Annadaata thrown into a larger crisis

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்களுக்கும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிக்கும்

  • இந்தப் புதிய சட்டங்களின் தீய விளைவுகள் தேசம் முழுவதும் பரவும்
  • அவர்கள் விவசாயினுடைய குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பறித்துவிட முயல்கிறார்கள்
  • அரசு வேளாண் துறையில் இன்னும் அதிகமாகவே முதலீடு செய்ய வேண்டும்
  • அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

- என்கிறார் புகழ்பெற்ற விவசாயப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் (ஓய்வு) டி. நரசிம்ம ரெட்டி.

“மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண்சட்டங்கள் விவசாயிகளை படுமோசமானதொரு சோதனையில் தள்ளிவிடுவது போல் தோன்றுகின்றன. இக்கட்டில் மாட்டிக்கொண்ட உழவர்களைக் காப்பாற்ற, அரசாங்கம் வேளாண் துறையில் மூதலீடுகளை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாயிகளை பெரிய தொழில் நிறுவனங்களிடமும், கார்ப்பரேட்களிடமும் கையேந்த வைக்கும் புதிய சட்டங்களை அரசு கொண்டுவந்திருக்கிறது, என்கிறார் விவசாயப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் (ஓய்வு) டி. நரசிம்ம ரெட்டி.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் சோஷியல் சயன்ஸில் டீனாகவும், பொருளாதாரப் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ரெட்டி தற்பொழுது டில்லியில் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹியூமன் டெவலப்மெண்ட்டில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஆந்திரா அரசாங்கம் 2005 மற்றும் 2016-ல் அமைத்த விவசாய கமிஷன்களில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆசிரியரான பேராசிரியர் நரசிம்ம ரெட்டி புதிய வேளாண் சட்டங்களைப் பற்றிய தனது கருத்துக்களை ஈநாடு/ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துகொண்டார்.

இதோ அவற்றின் தொகுப்பு…

  • மத்திய அரசின் புதிய சட்டங்களால் விவசாயிக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்?

    இந்தப் புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு பெருத்த அடியாக இருக்கும். சில மாற்றங்களைக் கொண்டுவருவதின் மூலம் வேளாண்மைச் சந்தைக் குழுக்களை அரசாங்கம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கட்டுப்பாடற்ற வேளாண்மைச் சந்தை அமைப்பை அது கொண்டுவந்திருக்கிறது. அது நிஜமாகவே பயங்கரமானது. இந்தச் சட்டங்கள் பெரும்பாலான உழவர்களுக்கு ஒருபயனும் தரப்போவதில்லை.

இதுவரை நமக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தருகின்ற ஒரு சீரான, கட்டுக்கோப்பான சந்தை அமைப்பு இருந்தது. இனி இந்தப் புதிய சட்டங்களால், வேளாண் விளைபொருட்களின் விலையை தேவையும், வழங்கலும்தாம் தீர்மானிக்கும். இன்னொரு முக்கியமான அம்சம்: அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் காலாவதி ஆக்கப்பட்டுவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்தான் பதுக்கலைத் தடுத்த ஓர் அரண். அளவுக்கு அதிகமான பொருட்களைச் சல்லிசான விலையில் வாங்கிப் பதுக்கும் வியாபாரத் தந்திரங்களிலிருந்து உழவர்களையும், நுகரவோர்களையும் அந்தச் சட்டம்தான் பாதுகாத்து வந்தது. இப்போது அந்தச் சட்டம் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுவிட்டது, கட்டுப்பாடற்ற சந்தை அமைப்பின் நலனுக்காக. புதிய சட்டங்களின் விளைவாக, அரசாங்க முதலீடுகள் குறைந்துவிடும். எல்லாக் கட்டுப்பாடுகளும் மறைந்துவிடும். இந்திய உணவுக் கழகத்தின் பங்களிப்பு குறைக்கப் பட்டுவிடும். பண்ணை விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது முற்றிலும் தனியார்வசம் போய்விடும். கொள்முதல் செய்வதிலிருந்து பதப்படுத்துதல் வரையிலான விளைபொருள் சம்பந்தப்பட்ட எல்லாச் செயல்களும் பெரும் தொழிலதிபர்களின் ஆணைப்படியே நடக்கும். அவர்கள் வேளாண் விளைபொருட்களுக்கு ‘பிராண்ட்’ ஒன்றை உருவாகி அதிக விலைக்கு விற்று விடுவார்கள்.

அடிப்படை வேளாண் உள்கட்டமைப்புக்கான முதலீடு சுருங்கிப் போய்விடும். சரக்குக் கிடங்குகளையும், குளிர்ப்பதன வசதிகளையும், பதப்படுத்தும் மையங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்புகளும், தனிமனிதர்களும்தான் விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விசயம்தான்.

புதிய சட்டங்களால் வலிமைபெற்ற தனியார் கிடங்குகள் பொருட்களைச் சேமிக்க கொள்ளைப்பணம் வசூலிக்கலாம். அந்தக் கிடங்குகளில் விவசாயி தன் விளைபொருளைப் பத்திரப்படுத்திவிட்டு, நல்ல விலைக்குக் காத்திருந்தால், பயிரிடுவதற்காக அவன் போட்ட முதலீட்டுக்கு மேலே அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. கிடங்குகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால், விவசாயி நியாயமான விலைக்கு தன்பொருளைச் சேமிக்க முடியும். அந்தமாதிரியான கிடங்குகளில் சேமித்துவைத்திருந்த விளைபொருளின் மீது அவன் கடன்கூட வாங்கலாம். அந்த மாதிரியான செளகரியங்களைப் புதிய சட்டங்கள் சாத்தியமில்லாமல் ஆக்கிவிட்டன.

  • ஒரு விவசாயி தன் விளைபொருளை எந்தச் சந்தையில் நல்ல விலை கிடைக்குமோ அங்கே சென்று விற்பதற்குப் புதிய சட்டங்கள் வழிவகுக்கின்றன. அப்படியிருக்கும்போது, விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்?

கிட்டத்தட்ட 85 சதவீத விவசாயிகள் சிறிய, குறுவிவசாயிகள்தான். சந்தை வெகுதூரத்தில் இருக்கும்போது, அவர்கள் தங்கள் விளைபொருளை தங்கள் கிராமத்தில் இருக்கும் வியாபாரியிடமே விற்பார்கள். அந்த மாதிரியான ஜனங்கள் நல்ல விலைதேடி தொலைதூர இடங்களுக்கு தங்கள் பொருளைச் சுமந்துகொண்டு எப்படிச் செல்ல முடியும்? தொலைவில் இருக்கும் சந்தைக்கு ஒரு சிறு விவசாயி பத்து குவிண்டால் நெல்லை அல்லது பத்து பருத்தி மூட்டைகளை டிராக்டரில் வைத்து கொண்டு செல்ல முடியுமா? சந்தையில் நல்ல விலை வரும் வரை அந்தமாதிரியான விவசாயி காத்திருக்க முடியுமா? இன்றும்கூட தெலங்கானா விவசாயிகள் நல்ல விலைக்காக தங்கள் சரக்குகளைத் தொலைதூர இடங்களுக்குக் கொண்டுசெல்லும் நிலையில் இல்லை. வேளாண் சந்தைகளை ஒழித்துவிட்டால், விவசாயிகள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.

  • பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருக்கும் கமிஷன் ஏஜெண்டுகளைத் தவிர, எந்த விவசாயிக்கும் புதிய சட்டங்களால் நஷ்டம் உண்டாகாது என்று மத்திய அரசாங்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறதே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இது உண்மையல்ல. இந்தச் சட்டங்களின் தீய விளைவுகளைத் தேசம் முழுவதும் உணரும். பஞ்சாபில் இருக்கும் பிரச்சினை கொஞ்சம் வித்தியாசமானது. அங்கு விளையும் பயிர்களில் 84 சதவீதம் நெல்லும், கோதுமையும்தான். விளைச்சலில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பஞ்சாப் விவசாயிகள் பெற்றுவிடுகிறார்கள். பஞ்சாபில் பயிர்மாற்றம் நெல்லுக்குப் பின் கோதுமை என்பதுதான். நிலையாக குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுத் தருவதால், அந்தப் பயிர்கள் அங்கே வளர்க்கப்படுகின்றன. இதில் முரண்நகை என்னவென்றால் தான் உண்ணாத நெல்லை பஞ்சாப் பயிர்செய்கிறது. தங்களுக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் முழுப்பயிரையும் விவசாயிகள் விற்றுவிடுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. தன் தேவைக்கென்று கொஞ்சம் வைத்துக் கொண்டு விவசாயி மிச்சத்தை விற்கிறான். ஆந்திரப் பிரதேசத்தில் 40 சதவீதம் நெல்தான் பயிரிடப்படுகிறது. தெலங்கானாவில் நெல்விதைப்பு கடந்த வருடமும், இந்த வருடமும் கணிசமாக அதிகமான போதும், பெரும்பாலும் அதிகப் பரவலாக வளர்க்கப்படும் பயிர் பருத்திதான்.

பிரச்சினை நெல், கோதுமை விவசாயிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தை உதாரணமாகச் சொல்கிறேன். அங்கே வேர்க்கடலைதான் பிரதான பயிர். வேர்க்கடலைக்கு மாற்றுப் பயிரை அங்கே உருவாக்க வேண்டிய தேவையைப் பற்றி பல தசாப்தங்களாகவே நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த மாவட்டத்து விவசாயிகள் பப்பாளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களை வேளாண்மை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பயிர்களுக்குப் போதுமான விலை கிடைப்பதில்லை. சேமிப்புக்கும், சந்தைக்குமான ஏற்பாடுகள் அங்கே இல்லை. தெலங்கானாவில் பருத்திக்கு ஆதரவு விலை இருக்கிறது. ஆனாலும் பருத்தி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைமையைச் சரிசெய்வதற்குப் பதிலாக, சந்தையைக் கட்டுப்பாடற்றதாக்கி அதைத் தனியார் வசம் ஒப்படைக்கும் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது அரசாங்கம். இந்தச் சட்டங்களின் பாதிப்பை எல்லா மாநிலங்களும் உணர்ந்துவிடும்.

  • இந்தப் புதிய சட்டங்களால், இரண்டு விதமான சந்தைகள் உருவாகும் என்றும், வெவ்வேறு வகையான சட்டத்திட்டங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது எப்படிச் சாத்தியமாகும்?

ஆம். வேளாண் சந்தைக் குழுக்கள் இருக்கும். ஆனால் தனிமனிதர்கள் அந்தச் சந்தைத் திடல்களுக்கு வெளியே சரக்குகள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, இரண்டு விதமான சந்தைகள் இருக்கும் என்று அர்த்தம். குறைந்தபட்ச ஆதரவு விலையை தனியார் டீலர்களிடம் எப்படி வலியுறுத்த முடியும்? குறிப்பிட்ட ஒரு விலையில்தான் வேளாண் பொருளை வாங்க வேண்டும் என்று வியாபாரியை நிர்ப்பந்திக்கும் சட்டம் எதையும் மத்திய அரசாங்கம் கொண்டுவரவில்லை. அதற்குப் பதிலாக சுதந்திரமான சந்தையைத் திறன்படுத்தும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. திடலுக்கு உள்ளே கட்டமைக்கப்பட்ட சந்தை இருக்கும். வெளியே சுதந்திரமான, கட்டுப்பாடற்ற சந்தையிருக்கும். அந்தச் சந்தைகளுக்கு வெவ்வேறு விதமான கட்டணங்கள், வெவ்வேறு விதமான விதிகள் உருவாக்கப்படும். அதன் விளைவாக, வியாபாரிகள் கட்டுப்பாடான சந்தையை விட்டுவிடுவார்கள்; கட்டற்ற சந்தையில் தொழில் செய்வார்கள். ஏற்கனவே சந்தைத் திடல்களில் வியாபாரிகள் ரகசியமாக கூட்டணி வைத்துக் கொண்டு விவசாயிகளிடம் விலையைக் கெடுபிடியாக நிர்ணயிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், அவர்கள் சந்தைக்கு வெளியேயும் அதைத்தான் செய்வார்கள். சந்தைத் திடலிலாவது இந்தக் கள்ளக் கூட்டுறவு நம் கவனத்திற்கு வரும்போது, அதை அதிகாரிகளிடம் நாம் சொல்ல முடியும். ஆனால் விவசாயச் சந்தைக்கு வெளியே நம் புகார்களைக் கேட்க யாருமே இருக்க மாட்டார்கள்.

சந்தைத் திடலுக்கு வெளியே, விலை, எடை, ஈரப்பதம், தரவரிசை, இத்யாதி என்று விவசாயிகள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இந்த மாதிரியான விவசாயிகளைச் சுரண்டுதல் என்பது ஏற்கனவே மலைச்சாதியினர் பகுதிகளிலும், தொலைதூரப் பகுதிகளிலும் இருக்கின்றது. புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்கும். அரசாங்கம், வேளாண் சந்தைத் திடல்களை ஒழிக்காமலே, குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிக்க விரும்புகிறது என்பது புதிய சட்டங்களிலிருந்தே நிதர்சனமாகத் தெரிகிறது. பஞ்சாப், ஹரியானா மற்றும் கிழக்கு உத்தரபிரதேசம் ஆகியவற்றைத் தவிர, வேளாண் சந்தைக் குழுக்கள் விவசாயிகளிடமிருந்து வெறும் 20 சதவீத விளைபொருட்களைத்தான் வாங்குகின்றன. குறைந்தது அந்த அளவிலாவது விவசாயிகள் குறைந்தபட்ச விலையைக் கேட்கும் திறனுடையவர்களாக இருக்கிறார்கள். புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின்பு, குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்கும்; ஆனால் கட்டற்ற சந்தையின் காரணமாக, அதை வலியுறுத்த முடியாது என்று அரசாங்கம் சொல்லும்.

  • சுவாமிநாதன் அறிக்கையை முந்தைய ஐக்கிய முன்னேற்ற முன்னணி அரசு நிராகரித்தது; ஆனால் அதைத் தாங்கள்தான் முற்றிலும் நடைமுறைப்படுத்தி இருப்பதாக மத்திய அரசு சொல்கிறதே?

இது முற்றிலும் பொய்யான பிரச்சாரம். சுவாமிநாதன் என்ன சொன்னாரோ அதற்கு முற்றிலும் மாறாகத்தான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. ஆதரவு விலையை எப்படிக் கணக்கிட வேண்டும் என்று தெளிவாக அவரது கமிஷன் சொல்லியிருக்கிறது; மேலும் விவசாயிகளுக்கான விலையில் 50 சதவீதம் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அது சொல்லியிருக்கிறது. விலை கணக்கிடப்படும் முறையைப் பற்றிய கமிஷனின் கருத்தை அவர்கள் திரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றுவதாகும்? விலையை நிர்ணயம் செய்யும்போது, முதலீட்டுக்கான வட்டி, நில வாடகை உட்பட எல்லா அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கமிஷன் சொல்லியிருக்கிறது. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. கிடங்குகள், மற்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பற்றியும் அது பல பரிந்துரைகளைத் தந்திருக்கிறது. கமிஷன் என்னவெல்லாம் பரிந்துரைத்ததோ அவற்றை எல்லாம் மத்திய அரசு முற்றிலும் மீறியபடியே செயல்படுகிறது.

  • சட்டங்கள் விவசாயிகளுக்குச் சாதகமாக இல்லாதபோது, மாநில அரசுகள் அவற்றைக் கிடப்பில் போடமுடியாதா?

மாநில அரசுகளுக்கு இதில் பங்கு இல்லை. விவசாயம் ஒரு மாநில விசயம்தான். விதைகள் வழங்குவதிலிருந்து, விளைபொருள் கொள்முதல் வரை எல்லாமும் மாநில அரசின் எல்லைக்குட்பட்டதுதான். ஆனால் தனக்குச் சாதகமான ஒரு விதியைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது. முன்பெல்லாம் மத்திய அரசு மாதிரிச் சட்டம் ஒன்றை உருவாக்கி அதன் வரைவை மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையாய் அனுப்பிவிட்டு, அதைப் போன்ற சட்டத்தைக் கொண்டுவரும்படி அறிவுறுத்தும். பழைய வழக்கத்திற்கு மாறாக, இப்போது மத்திய அரசே சட்டங்களை இயற்றிவிடுகிறது. அந்தச் சட்டங்களை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும். விதை, உரம், பயிர்க்கடன், விளைபொருள் கொள்முதல் போன்ற எல்லாத் தேவைகளுக்கும் விவசாயி மாநில அரசை எதிர்பார்ப்பதுண்டு. மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரங்களைப் புறக்கணிக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட சந்தை இல்லை என்றால், மாநில அரசின் கட்டுப்பாடு அங்கே இருக்காது. இந்த விசயத்தில் மாநிலத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்பது போல மத்திய அரசு செயல்படுவது சரியல்ல. வேளாண் சந்தைத் திடலின் எல்லைக்கு அப்பால் புதிய வியாபார மையங்களை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அதனால்தான், வேளாண் விளைபொருட்கள் விற்கப்படும் எல்லா இடங்களும் வேளாண் சந்தைக் குழுவின் அதிகாரத்திற்குக் கட்டுப்படுகின்றன என்று சில மாநிலங்கள் விவாதம் செய்கின்றன. புதிய சட்டங்களை உருவாக்கும்போது, மத்திய அரசு விவசாயிகளிடம் ஆலோசனை கேட்கவில்லை; மாநில அரசுகளையும் கேட்கவில்லை. நாளை கஷ்டப்படப் போவது விவசாயிகள்தான். மாநிலங்கள் அதன் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். தாராளமயமாக்கல் கொள்கையை விரிவாக்கும்முகமாக, மத்திய அரசு பெரிய தொழிலதிபர்களை உள்ளே கொண்டுவருவதற்காக இந்தச் சட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அதனால்தான் அது மாநிலங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டது.

  • விவசாயிகளைச் சாந்தப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

வேளாண் துறையில் அரசு முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அடுத்த பத்து வருடத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்தலுக்காக பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு லட்சம் கோடி பணத்தைத் தூக்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, அரசாங்கமே அந்தப் பொறுப்பை தன் தோளில் சுமந்துகொள்ள வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகள் ஊக்குவிக்கப் படவேண்டும். இந்தத் துறைகள் சார்ந்த மக்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக உயர்த்தப் படவேண்டும். நாட்டில் தனிநபர் உரிமை நிலம் 2.5 (இரண்டரை) ஏக்கர். இந்தச் சிறிய நிலத்திலிருந்து விவசாயியால் தன்தேவைக்கேற்ற வருமானத்தைப் பெற முடியவில்லை. ஒரு விவசாயிக் குடும்பத்தின் தனிநபர் வருமானம் 1.25 லட்சம். பஞ்சாபில் இது 3.4 லட்சம்.

கிட்டத்தட்ட ஐந்துகோடி மக்கள் 2004-05-ல், 2017-18-ல் விவசாயத்தை விட்டுவிட்டார்கள். சமீபத்தில் கரோனா லாக்டவுனில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு நீண்ட பாதயாத்திரை சென்றார்கள். அவர்களில் பெரும்பாலோனர் விவசாயிகள். மற்ற துறைகளில் சராசரி வருமான வளர்ச்சி 15 சதவீதம்; ஆனால் விவசாயத் துறையில் வருமானம் ஒரு சதவீதம் மட்டுமே வளர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் இரண்டு விழுக்காடு மக்களே வேளாண்மையைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நாடு தான் நுகர்கின்றதை விட ஒன்றரை மடங்கு அதிகமாகவே உற்பத்தி செய்கிறது. ஜப்பானில் சிறிய, குறுவிவசாயிகள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 விழுக்காடு மக்கள் உழவுத்தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள்.

நம் தேசமும் விவசாயம் சம்பந்தமான துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் மூன்று ஏக்கர் நிலம் கொண்ட ஒரு விவசாயி, தன்குடும்பத்தின் கல்வி, மருத்துவம், மற்றும் பல அடிப்படைத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்ய முடியும்? கல்வியும், மருத்துவமும் விவசாயிக்கு எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். விவசாயியின் துயரைத் துடைப்பதற்குப் பதிலாக, இந்தப் புதிய சட்டங்கள் அவனை மேலும் துயரமானதொரு நிலைமைக்குக் கொண்டு போய்விடும்.

Last Updated : Dec 23, 2020, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.