ETV Bharat / jagte-raho

முன்விரோதத்தால் மூதாட்டியை கொலைசெய்த மூவருக்கு ஆயுள் தண்டனை

author img

By

Published : Dec 16, 2020, 9:15 AM IST

தேனி: பெரியகுளம் அருகே முன் விரோதத்தால் மூதாட்டியை கொலைசெய்த தந்தை, இரு மகன்கள் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Theni District
Theni District

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி தெற்குத் தெருவில் வசித்துவருபவர் அழகர் மகன் பெரியமுருகன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மொக்கை (52), அவரது மகன் உதயகுமாருக்கும் (23) இடையே ஏற்பட்ட பிரச்னையால் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் 2012ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெரியமுருகனை மொக்கையும், அவரது இரு மகன்களான உதயகுமார், முத்து ஆகியோரும் மண்வெட்டி, கடப்பாறையால் தாக்க முற்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கவந்த பெரியமுருகனின் தாய் ராமாயி, மனைவி லட்சுமி, மகள் பூங்கொடி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் மூதாட்டி ராமாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி லட்சுமி, மகள் பூங்கொடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். இது தொடர்பாக பெரியமுருகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய தேவதானப்பட்டி காவல் துறையினர் மொக்கை, உதயகுமார், முத்து ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் நேற்று (டிச.15) தேனி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மூதாட்டியை கொலை செய்ததற்காக தந்தை, மகன்கள் உள்பட மூன்று பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையையும், பெரியமுருகனின் மனைவி, மகளைத் தாக்கி கொலை முயற்சி செய்ததற்காக தலா ரூ.10 ஆயிரத்துடன் கூடிய ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் காயமடைந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதமாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார்.

இது தவிர அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டாண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் தகுந்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை திருடும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி காட்சிகளை சமர்பித்து புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.