ETV Bharat / jagte-raho

மாற்றுத்திறனாளி மகள் தற்கொலை - தந்தை புகார்!

author img

By

Published : Nov 27, 2020, 12:28 PM IST

Updated : Nov 27, 2020, 5:00 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி பெண் தற்கொலையால் உயிரிழந்ததால் அவரது இறப்புக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்று பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் அப்பெண்ணின் கணவரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

woman Suicide
woman Suicide

மயிலாடுதுறை அருகே உள்ள ஐவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்துக்குமார் (வயது 42). மெடிக்கல் ரெப்-ஆக வேலை பார்க்கும் இவர் தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த வாய்ப்பேச இயலாத மாற்றுத்திறனாளியான நித்யா (27) என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பவுன் நகை, பைக்குடன் இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. செல்வமுத்துக்குமார் அடிக்கடி செல்போனில் பெண்களுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட நித்யா சைகையால் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் கட்டினால்தான் மெடிக்கல் ரெப் வேலையை தொடரமுடியும் என்று வற்புறுத்தி இரண்டு ஆண்டிற்கு முன்பு நித்யா வீட்டில் பணத்தைக் பெற்றுள்ளார் செல்வமுத்துக்குமார். மீண்டும், மீண்டும் பணம் கேட்டு மாமியார் நாகலட்சுமி மட்டுமல்லாமல் செல்வமுத்துக்குமாரின் தம்பியும் சேர்ந்து நித்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

இதுகுறித்து நித்யா தனது வீட்டாரிடம் சைகை மொழியால் தெரிவித்து அழுதுள்ளார். நித்யாவிற்கு மாதாமாதம் வரும் உதவித்தொகை ரூ. 2 ஆயிரத்தை ஊருக்குச் சென்று வாங்கி தனது கணவனிடம் அளித்து வந்துள்ளார். இதுபோல் பல கொடுமைகளை அனைத்தையும் தனது சைகை மொழியால் நித்யா கூறியபோதெல்லாம் அவரது பெற்றோர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று நேற்று(நவ.26) மதியம் நித்யா தூக்குப்போட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பில் சந்தேகப்பட்ட நித்யாவின் தந்தை ராமமூர்த்தி, தனது மகளின் சாவுக்கு வரதட்சணைக் கொடுமையே காரணம் என்று அளித்த புகாரின்பேரில் மணல்மேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வமுத்துக்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிந்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவர் கைது

Last Updated : Nov 27, 2020, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.