ETV Bharat / jagte-raho

நீட் தேர்வு முறைகேடு - ஆதார் ஆணைய உதவியை நாடிய சிபிசிஐடி!

author img

By

Published : Feb 13, 2020, 4:06 PM IST

சென்னை: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு போலியாகத் தேர்வு எழுதியவர்களை அடையாளம் காணும் பொருட்டு அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சிபிசிஐடி காவல்துறையினர் ஆதார் ஆணையத்துக்கு (UIDAI) பகிர்ந்துள்ளனர்.

fraudsters
fraudsters

நீட் தேர்வு முறைகேட்டை விசாரித்து வரும் சிபிசிஐடி, போலியாக நடித்து தேர்வு எழுதியவர்களை அடையாளம் காணும் பொருட்டு, ஆதார் ஆணையத்தின் (UIDAI) உதவியை நாடியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஆதார் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ள சிபிசிஐடி, முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 12 பேரின் புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை ஆதார் ஆணையத்துக்குப் பகிர்ந்துள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் மூலம், போலியாக நியமிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது கிரிமினல் சதி, ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சிபிசிஐடி காவல்துறையால் பதியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், வட இந்தியாவில் உள்ள தேர்வு மையத்தில் தனக்குப் பதில் போலியாக ஒருவரை நியமித்து தேர்வு எழுத வைத்து முறைகேடு செய்தது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இந்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதையடுத்து, அதே பாணியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் வெளிவந்தது. மேலும், இது தொடர்பாக 7 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட 15 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிற மாநிலத் தேர்வு மையங்களில், இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வர்களுக்குப் பதில் போலியாக தேர்வு எழுதியவர்கள் இளநிலை அல்லது முதுநிலை மருத்துவர்களாக இருக்கலாம் என்ற அடிப்படையில், சந்தேகத்திற்குதிய நபர்களின் புகைப்படங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஒட்டி அவர்களை அடையாளம் கண்டறிய உதவுமாறு, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு, சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது.

மேலும், சந்தேகத்திற்குரிய நபர்களின் தரவுகளை தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் பரிசோதிக்குமாறு, சுகாதாரத்துறை பொது இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் மருத்துவக் கல்லூரிகளின் அறிவிப்பு பலகைகளில் அவர்களது புகைப்படங்களை ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி - வலுக்கும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான கட்டுப்பாடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.