ETV Bharat / international

ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதுதான் இந்தியாவுக்கு லாபம்... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

author img

By

Published : Aug 17, 2022, 2:13 PM IST

நாட்டின் நலனுக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியில் சிறந்த ஒப்பந்தத்தை பெறுவது தனது தார்மீகக் கடமை என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

India
India

பாங்காக்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோதிலும், அதை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, ரஷ்யா - உக்ரைன் போரை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 50 மடங்கு உயர்ந்துள்ளது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கிடைப்பதால் அங்கிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. ஆனால், ரஷ்யா- உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவது ரஷ்யாவுக்கு நிதியுதவி செய்வதுபோலாகும் என குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், 9ஆவது இந்தியா - தாய்லாந்து கூட்டுக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (ஆக.16) பாங்காக் சென்றார். அங்கு இந்திய வம்சாவளியினருடன் பேசிய அவர், "எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கவே அனைத்து நாடுகளும் முயற்சிக்கும், அதைத்தான் இந்தியாவும் செய்கிறது. இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் 2 ஆயிரம் டாலர்தான். இந்த நிலையில் உள்ள நாட்டுக்கு பொருளாதார ரீதியாக சிறந்த லாபகரமான ஒப்பந்தத்தை உறுதி செய்வது எனது தார்மீக கடமை" என்றார்.

மேலும், இந்தியா - தாய்லாந்து உறவுகள் குறித்து பேசிய ஜெய்சங்கர், "தாய்லாந்து உடனான எங்கள் உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். அரசியல் ரீதியான பிணைப்பை அதிகரிப்பது, வர்த்தகத்தை அதிகரிப்பது, இரு நாடுகளுக்கிடையேயான முதலீடுகளை மேம்படுத்த தடையாக உள்ள காரணிகள் குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த கூட்டு ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா முனைப்புடன் இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கோரிய வழக்கு - மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.