ETV Bharat / international

King Charles III: இங்கிலாந்து மன்னராக இன்று முடிசூடுகிறார் மூன்றாம் சார்லஸ்.. கோஹினூர் வைர கிரீடம் தவிர்ப்பு!

author img

By

Published : May 6, 2023, 8:44 AM IST

இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணியாக அவரது மனைவி கமிலா ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர். இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொள்கிறார்.

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று பதவியேற்பு - ஜெகதீப் தன்கர் லண்டன் சென்றார்
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று பதவியேற்பு - ஜெகதீப் தன்கர் லண்டன் சென்றார்

வாஷிங்டன்: கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி, இங்கிலாந்தின் ராணியாக நீண்ட காலமாக இருந்த ராணி 2ஆம் எலிசபெத் (96) காலமானார். இதனையடுத்து இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ், 2023ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி முடி சூட்டப்படுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

அதன் அடிப்படையில், இன்று (மே 6) மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பதவி ஏற்க உள்ளார். வெஸ்ட்மினிஸ்டர் அபே பகுதியில் நடைபெறும் முடிசூட்டு விழாவில், மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். ஆனால், வழக்கமாக பயன்படுத்தப்படும் கோஹினூர் வைரம் இம்முறை பயன்படுத்தப்படவில்லை.

அதேநேரம், ஸ்டோன் ஆஃப் டெஸ்டினி (Stone of Destiny) என்ற கல் முடிசூட்டும் நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஸ்காட்லாந்தில் பராமரிக்கப்படும் இந்த கல்லைக் கொண்டு வருவதற்கு உள்ளூர் காவல் துறை மட்டுமல்லாது ரானுவமும் பாதுகாப்பு வழங்குகிறது.

செவ்வக வடிவிலான சிவப்பு நிற மணற்கல்லான இது, 9ஆம் நூற்றாண்டில் இருந்து ஸ்காட்லாந்தின் மன்னர்கள் முடிசூட்டும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், இந்த கல்லை 1296ஆம் ஆண்டு இங்கிலாந்தின் எட்வர்டு, ஸ்காட்லாந்தின் அரச குடும்பத்தில் இருந்து பறித்தார் என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், விதியின் கல் என சொல்லப்படும் இந்த கல், 1399ஆம் ஆண்டில் 4வது ஹென்றி முதல் இங்கிலாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், பட்டத்து ராணியாக இருந்து இங்கிலாந்தின் ராணியாக பதவி ஏற்க உள்ள கமிலாவுக்கு, 1911ஆம் ஆண்டு 5ஆம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான ராணி மேரியின் முடிசூட்டு விழாவிற்காக செய்யப்பட்ட கிரீடத்தையே அவருக்கு சூட்டப்படும். இதன் மூலம் 18ஆம் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு பட்டத்து ராணியின் கிரீடம், முடிசூட்டு விழாவிற்கு மீண்டும் பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த நிகழ்வில் லியோனல் ரிச்சி, டேக் தட் உள்பட பல்வேறு இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளது. மேலும், இந்த நிகழ்விற்கு இந்தியா சார்பில், நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். இவர், நேற்றைய தினமே லண்டன் சென்றடைந்தார். அதேபோல், சோனம் கபூர் உள்ளிட்ட இந்திய பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் மும்பை டப்பாவாலாக்கள் - எதுக்கு போறாங்க தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.