ETV Bharat / international

திடீர் நம்பிக்கை இல்லா தீர்மானம்.. தப்பினார் போரிஸ் ஜான்சன்...  வலுவிழக்கும் பிரிட்டன் பிரதமர்?

author img

By

Published : Jun 7, 2022, 10:53 AM IST

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருந்தாலும், தனது வலுவினை சொந்த கட்சியிலே இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி - வலுவிலக்கிறாரா பிரிட்டன் பிரதமர்?
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி - வலுவிலக்கிறாரா பிரிட்டன் பிரதமர்?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து பிரதமராக பதவியேற்றார். அப்போதுதான் , கரோனா பெருந்தொற்றின் முதல் அலை காட்டுத்தீயாக பரவி வந்தது. இதனால், பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்துக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை மீறி பிறந்தநாள் விருந்தினை நடத்தினார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்பட அரசு அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளி இன்றி கூடினர். இதற்கு, தனது சொந்த கட்சியிலே போரிஸ் ஜான்சன் எதிர்ப்பை சம்பாதித்தார்.

இதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு, ஜூன் 2020இல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

மேலும், எதிர்க்கட்சிகளும் அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் "பார்ட்டிகேட்" ஊழல் தொடர்பாக போரிஸ் ஜான்சனை ராஜினாமா செய்யக் கோரினர். இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டத்தின்போது, போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 6) இரவு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார். அதிலும், போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர் என கட்சிக் குழுத் தலைவர் கிரஹாம் பிராடி தெரிவித்தார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "மிகச்சிறந்த திருப்திகரமான முடிவு. ஊடகங்களில் வெளிவரும் அனைத்தையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. என்னுடைய வாக்கு வெற்றி எனக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இது மிகவும் நல்ல, நேர்மறையான, உறுதியான, தீர்க்கமான முடிவு என்று நான் நினைக்கிறேன். இது எங்களை ஒன்றிணைக்க உதவுகிறது," எனத் தெரிவித்தார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் தெரசா மே, 2018 இல் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டபோது அவரது சொந்தக்கட்சியில் 63% அளவிலான ஆதரவைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மேலும் வலுப்படும் - போரிஸ் ஜான்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.