ETV Bharat / entertainment

‘நம்ம படம் எடுப்போம் நண்பா..’ ராவுத்தர் பிலிம்ஸ் கம்பெனி உருவானதன் பின்னணியில் விஜயகாந்த்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 4:02 PM IST

Vijayakanth: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் - ராவுத்தர் நட்பு பற்றியும், ராவுத்தர் பிலிம்ஸ் கம்பெனி உருவானது பற்றியும் சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தி.

Ravuthar Films Company
விஜயகாந்த் - ராவுத்தர் நட்பு கூட்டணியில் ராவுத்தர் பிலிம்ஸ் கம்பெனி உருவானது எப்படி..?

சென்னை: மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயராஜ் என்னும் விஜயகாந்த், சிறுவயது முதலே எம்ஜிஆர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் படங்களைப் பார்த்து, சினிமா நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டவர். பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயகாந்த், பின்னர் மதுரையில் அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து சினிமா ஹீரோவாக வேண்டும் என்ற முடிவில், சென்னை நோக்கிப் பயணித்தார். விஜயகாந்த் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்னை பயணித்தவர். இந்த நிலையில்தான், அவரும் அவரது பள்ளித் தோழரான இப்ராஹிம் ராவுத்தர் ஆகிய இருவரும், சென்னை தி.நகர் ராஜாபாதர் தெருவில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தனர். விஜயகாந்த் ஹீரோ வாய்ப்பு கேட்டு ஏறி இறங்கிய தயாரிப்பு நிறுவனங்களில், தோற்றத்தைக் கொண்டு பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இதனால் கோபமடைந்த ராவுத்தர், அந்த கம்பெனிகளுக்குச் சென்று சண்டையிட்ட சம்பவங்களும் உண்டு. கடந்த 1979ஆம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து விஜயகாந்த் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடி முழக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அப்போது முதல் விஜயகாந்த் நடிக்கும் படங்களின் கதைகளைத் தேர்வு செய்வது, தயாரிப்பு முதல் கால்ஷீட் விவகாரம் வரை அனைத்து அதிகாரங்களையும் விஜயகாந்த், தனது உயிர் நண்பரான ராவுத்தருக்கு வழங்கியிருந்தார்.

இப்ராஹிம் ராவுத்தர், ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ், சினி புரோடக்‌ஷன்ஸ் ஆகிய பேனர்களில் பல படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த முதல் திரைப்படம் உழவன் மகன்.

தீபாவளி பண்டிகைக்கு ரஜினியின் மனிதன், கமல்ஹாசனின் நாயகன் ஆகிய படங்களுடன் போட்டியிட்ட விஜயகாந்த் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜயகாந்த், ராவுத்தர் நட்பு கூட்டணியில் பரதன், தாய்மொழி, ராஜதுரை, கருப்பு நிலா, தர்மா உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகின.

வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் உணவின்றி தவித்ததனால், விஜயகாந்த் ஆசைக்கிணங்க ராவுத்தர், தி.நகரில் உள்ள தனது தயாரிப்பு அலுவலகத்தில் தினம் 100 பேருக்கு மேல் உணவு வழங்கத் தொடங்கினார். 1980-1990களில் ஒரு திரைப்படத்தில் துணை இயக்குநராக வேலை பார்த்தவர்களுக்கு மட்டுமே இயக்குநராக வாய்ப்பு வழங்குவர்.

அந்த வழக்கத்தை உடைத்தெரித்தது, விஜயகாந்த் - ராவுத்தர் நட்பு கூட்டணி, திரைப்படக் கல்லூரியில் பயின்ற ஆபாவாணன், அரவிந்த்ராஜ், ஆர்.கே.செல்வமணி, செந்தில்நாதன் ஆகியோரை இயக்குநர்களாக மாற்றி அழகு பார்த்தது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், விஜயகாந்த் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது 'புலன் விசாரணை'. படப்பிடிப்பு நாட்கள் நீண்டு கொண்டே போக, ஒரு கட்டத்தில் ராவுத்தர் நம்பிக்கை இழந்தார்.

ஆனால் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானபோது, பட்டிதொட்டி எங்கும் அப்படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிகராக அறிமுகமாகினர். விஜயகாந்தின் அனைத்து விதமான அசைவுகளையும் முடிவு செய்த ராவுத்தர், அவரது நட்பில் விரிசல் ஏற்பட்டு விடுமோ என திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

ஆனால் தன் நண்பனுக்கு வாழ்க்கைத் துணை தேவை என்பதை புரிந்து கொண்டு விஜயகாந்திற்கு 1990-இல் பிரேமலதாவைத் திருமணம் செய்து வைத்தார். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த 100வது திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரும் வெற்றி பெற்றது. பின்னர் விஜயகாந்த், ராவுத்தர் நட்பில் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர்.

கடந்த 2015இல் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த ராவுத்தரை, விஜயகாந்த் சென்று பார்த்தார். அப்போது சுய நினைவு இழந்திருந்த ராவுத்தர் மீண்டு வர வேண்டும் என விஜயகாந்த் கவலையோடு கடிதம் எழுதியிருந்தார். பின்னர் அதே வருடம் ராவுத்தர் உயிரிழந்தார். இந்நிலையில் விஜயகாந்த் நேற்று (டிச.28) மறைந்தார்.

இதையும் படிங்க: கேப்டனின் நல்லடக்கத்தை காணவிடுங்கள்..! - தேமுதிக தொண்டர்கள் சாலைமறியல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.