மிக்ஜாம் புயல் பாதிப்பு: களத்தில் இறங்கி நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Dec 5, 2023, 7:22 PM IST

Etv Bharat

Vijay Fans: விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான விஜய் ரசிகர்கள், சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை உணவுப் பொருட்களை வழங்கினர்.

நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்..குவியும் பாராட்டுகள்

செங்கல்பட்டு: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிக்ஜாம் புயல்' ஆக வலுப்பெற்று, சென்னைக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனால், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்தது. மேலும், பல இடங்களில் மரங்களும் சாலையில் விழுந்தன.

முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. புயல் சென்னையை விட்டு நகர்ந்த நிலையில், இன்று காலை முதல் மழை இல்லை. ஆனாலும், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் படகு மூலம் மீட்டு வருகின்றனர்.

உணவின்றி தவிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு, தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (டிச.5) நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் மழை மற்றும் "மிக்ஜாம்" புயலில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அகில இந்திய பொது செயலாளர் புஸ்ஸி N.ஆனந்து நேரடியாக சென்று மேற்பார்வையிட்டு அரிசி, தார்பாய், பிரெட் பாக்கெட், பால் பாக்கெட், பிளாஸ்டிக் பாய், பெட்ஷீட், ஸ்டவ் ஆகியவற்றை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 200 நபர்களுக்கு பிரெட் பாக்கெட், 200 நபர்களுக்கு பால் பாக்கெட், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், 50 நபர்களுக்கு பெட்ஷீட், 5 நபர்களுக்கு ஸ்டவ் போன்றவைகள் வழங்கினார். இதனைத்தொடர்ந்து வடசென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

புயல் ஓயந்த பின்னும், கனமழையின் பாதிப்பில் இருந்து மீளாத தங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்ததாக விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு பொதுமக்கள் பாரட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இணையத்தில் உதவி கேட்ட நடிகர் விஷ்ணு விஷால்..! படகில் மீட்ட மீட்புக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.