ETV Bharat / entertainment

ரீ-ரிலீசுக்கு தயாராகும் எம்ஜிஆரின் "சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம்!

author img

By

Published : Nov 28, 2022, 7:32 PM IST

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான "சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

MGR
MGR

சென்னை: எம்ஜிஆர், லதா நடிப்பில் கடந்த 1974ஆம் ஆண்டு வெளியான "சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம், டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் சரத்குமார், மயில்சாமி, பிரமிடு நடராஜன், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, டி. சிவா, தயாரிப்பாளர் கே.ராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசும்போது, "எம்ஜிஆர் ரசிகன் நான். எம்ஜிஆர் பாடல்களை கேட்டாலே தானாக எனர்ஜி வந்து விடும். அவரது அத்தனை பாடல்களிலும் ஒரு கருத்தும், தத்துவமும் இருக்கும். எம்ஜிஆர் தன் 55 வயதிலும் குதித்து குதித்து நடனமாடினார். அதற்கு காரணம் அவருடைய ஆரோக்கியம்" என்றார்.

நடிகை லதா கூறும்போது, "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் 1974ல் வந்தது. நான் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது, 50வது ஆண்டில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆவது பெருமையாக இருக்கிறது. புரட்சி தலைவர் எம்ஜிஆர்தான் என் தெய்வம். என்னை உருவாக்கியவர். கல்லாய் இருந்த என்னை சிற்பமாக செதுக்கியவர் எம்ஜிஆர். இதை நானும், அவரது ரசிகர்களும் மறக்கவில்லை.

ரசிகர்கள் என்னையும் மறக்கவில்லை. இன்றைக்கும் சமூக வலைத்தளங்களில் எனக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். இன்றைக்கு நான் நடித்து கொண்டு இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர்தான். என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதற்கும் அவர்தான் காரணம்" என்று குறிப்பிட்டார்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமி பேசுகையில்,"ஒரு மாபெரும் எழுச்சி, புகழ், வரலாற்றுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். அவர் ஒரு மூன்றெழுத்து தத்துவம். எம்ஜிஆருக்காக வாழ்ந்து மறைய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'பாபா' மறுவெளியீடு; மீண்டும் டப்பிங் பேசிய ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.