ETV Bharat / entertainment

'மார்கழி திங்கள்' இசை வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய மனோஜ் பாரதிராஜா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 1:11 PM IST

Margazhi Thingal trailer release: 'மார்கழி திங்கள்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், தந்தையுமான பாரதிராஜவிற்கு நடிக்க கற்றுக்கொடுத்ததாக நடிகர் மனோஜ் பாரதிராஜா கூறினார்.

மார்கழி திங்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
மார்கழி திங்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

சென்னை: நடிகராக வலம் வந்த மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (செப்.13) சென்னையில் நடைபெற்றது.‌

இவ்விழாவில் பாரதிராஜா, சுசீந்திரன், லிங்குசாமி , சிவக்குமார், கார்த்தி, மனோஜ் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் கார்த்தி மேடையில் பேசுகையில், “ நானும் மனோஜும் சிறு வயது முதலே நண்பர்கள். கே.எஸ்.ரவிகுமார் மாதிரி நிறைய படங்கள் பண்ண ஆசை என்று சுசீந்திரன் கூறினார். அதுபோல நிறைய படங்கள் எடுத்துள்ளார். இளையராஜா, பாரதிராஜா இணைந்தது ரொம்ப சந்தோஷம். அவர்களுடைய உயரத்தை எட்டவே போராடிக் கொண்டிருக்கிறோம். நண்பர்களாக எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும். சீமானின் பேச்சுக்கு நான் ரசிகன் அவரது பேச்சை கேட்க விரும்பினேன். படப்பிடிப்பு காரணமாக கிளம்ப வேண்டி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் பேரரசு மேடையில் பேசுகையில், “சீமானுக்கு இப்போதுதான் ஆதரவு கொடுக்க வேண்டும். சீமான் யாருக்கும் ஆதரவு அல்ல. தமிழுக்கு மட்டும் ஆதரவு. அவருக்கு இது சோதனையான நேரம். மீண்டு வந்துவிடுவார்.சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் தான் டி-ஷர்ட் போட முடியும். ஆனால் பொதுமேடையில் டி-ஷர்ட் போட முடியும் என்றால் இயக்குநர் இமயம்தான். ரஜினியை விட என்றும் இளமையானவர் தான் பாரதிராஜா.

சினிமாவில் 2 கலைஞர்கள் பிரிந்தால் மக்கள் வருத்தப்பட்டால் அது பாரதிராஜா, இளையராஜா இருவரும்தான். மக்களுக்கு அர்ப்பணித்து சேவை செய்தவர்கள். பாரதிராஜா, இளையராஜா இணைந்த பின் மீண்டும் பொற்காலம் தொடங்கி இருக்கிறது. நடிகரோ இயக்குநரோ யாராக இருந்தாலும் அவர்கள் வாரிசை ஹீரோவாக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் மனோஜ் நடித்திருந்தாலும் தற்போது தான் சரியான வழியில் செல்கிறார். இந்த படம் வெற்றியடைய வேண்டும்” என்று பேசினார்.

சிறப்பு விருந்தினரான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மேடையில் பேசுகையில், “நீ இயக்குநர் ஆக வேண்டும் என்று அடிக்கடி மனோஜிடம் கூறி இருப்பேன். என் ஆசையை நிறைவேற்றிய மனோஜுக்கு நன்றி. கார்த்தி மிகப்பெரிய இசை வெறியன். அவன் ஒரு பாடல் ஹிட்டாகும் என்று கூறினால் ஹிட் அடிக்கும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் டிரெய்லர் போட்டால் எப்படி இருக்குமோ அதுபோல இதன் டிரெய்லர் இருந்தது. இளையராஜா உங்களுடன் இணைந்திருக்கிறார் என்றால் இளையராஜா, பாரதிராஜா சேர்ந்திருக்கும் பெருமை தான். உலகமே மறைந்தாலும் அவர்களின் உறவு மறையாது என்றார்.

இயக்குநர் மனோஜ் பாரதிராஜா பேசுகையில், “எனது 18 வருட முயற்சி பயணம் இயக்குநர் ஆவது.என்னுடைய முதல் குரு மணிரத்னம். என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டது பாரதிராஜா. எனக்கும் சுசீந்திரனுக்கும் நல்ல பழக்கம். அவர் கூறி 15 நாட்களில் ஷூட்டிங் போனோம். குறைந்த நாட்களிலேயே படப்பிடிப்பு முடித்தோம். முதல் நாள் ஷூட்டிங்கில் அப்பாவுக்கு நான் நடிக்க கற்று கொடுத்தேன்.

அப்போது பழிவாங்குகிறாயா என்று கேட்டார். இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.‌ ஆனால் என்னுடைய முதல்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது எனது குடும்பம் தான்” என கண்கலங்க பேசினார்

சிறப்பு விருந்தினரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “மனோஜ் பன்முகத்தன்மை கொண்ட கலைஞன்‌.தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றால் அனைவரும் கொதிக்கிறார்கள். தமிழில் அழகான டைட்டில் வந்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் தமிழ் படங்கள் குறைந்து விட்டது.

படம் ஓடினால் எல்லோருக்குமான வெற்றி. படம் தோல்வி அடைந்தால் அது இயக்குநரின் தோல்வி. இயக்குநரை மறக்காமல் இருங்கள். இருவரும் இணைந்தது ரொம்ப சந்தோஷம். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நெல்சன், அனிருத் செய்தது பிரம்மாண்டமாக இருந்தது. அதுபோல படத்தை பேச வைக்க வேண்டும் என்று பேசினார்.

இதையும் படிங்க: சந்தோஷ் நாராயணனின் லைவ் இசைநிகழ்ச்சி... இலங்கையில் யாழ் கானம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.