ETV Bharat / entertainment

மனோஜ் பாரதிராஜா படத்தில் மீண்டும் இணையும் பாரதிராஜா - இளையராஜா கூட்டணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 1:09 PM IST

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் 'மார்கழி திங்கள்' படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் பதிவு தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat

பாரதிராஜா இளையராஜா கூட்டணி

சென்னை: இயக்குநர் பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறி வந்த நிலையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகரும், பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். இதன் மூலம் 31 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா நடிக்கும் முழு நீள படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன் அமேசான் ப்ரைமில் பாரதிராஜா இயக்கததில் ‘பறவை கூட்டததில் வாழும் மான்கள்’ என்ற ஆந்தாலஜி தொடரில் இசையமைத்து இருந்தார்.

இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய முழு நீள திரைப்படம் 'நாடோடி தென்றல்' ஆகும். தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்கும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்சன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் 'பம்பாய்' படத்தில் உதவி இயக்குந‌ராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டி அவரை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார். அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்றும், இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் தகர்த்தெறிந்த 16 சாதனைகள்.. எட்ட முடியாத உயரத்தில் சூப்பர் ஸ்டார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.