‘பிசிசிஐ கோல்டன் டிக்கெட்’.. நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!
Published: Sep 19, 2023, 7:27 PM


‘பிசிசிஐ கோல்டன் டிக்கெட்’.. நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!
Published: Sep 19, 2023, 7:27 PM

Rajinikanth got a Golden Ticket for ICC World cup 2023: அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு உலகக் கோப்பை 2023க்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ வழங்கியுள்ளது. இதனைப் பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் பிசிசிஐக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் கவுன்சில் (BCCI) செயலாளர் ஜெய் ஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வருகிற உலகக் கோப்பை 2023-ஐ முன்னிட்டு ஸ்பெஷல் ‘கோல்டன் டிக்கெட்’டை வழங்கினார். உலகக் கோப்பை கிரிக்கெட் 2023, வருகிற அக்டோபர் 5ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூஸிலாந்து அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி சர்வதேச மைதானத்தில் மோதுகிறது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நவம்பர் 19ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. பிசிசிஐ இந்த கோல்டன் டிக்கெட்டை இதற்கு முன்பாக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு வழங்கியுள்ளது. மிகவும் கௌரவமிக்க இந்த கோல்டன் டிக்கெட் மூலம் ரஜினிகாந்த் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் மைதானத்தில் விஐபிகளுக்கான பிரத்யேக பகுதியில் இருந்து காண முடியும். மேலும், இந்த கோல்டன் டிக்கெட் மூலம் இலவசமாக போட்டியை பார்ப்பது மட்டுமல்லாது, பல்வேறு வசதிகளும் செய்து தரப்படும்.
இது தொடர்பாக பிசிசிஐ தனது X பக்கத்தில் ”பல லட்சம் மக்களின் இதயங்களில் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து அனைவராலும் விரும்பப்படும் ரஜினிகாந்தை சந்தித்து இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் ஜெய் ஷா, உலகக் கோப்பை 2023-க்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். ரஜினிகாந்த், மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை போட்டியில் சிறப்பு விருந்திநராக பங்கேற்று சிறப்பிப்பார்” என பதிவிட்டு ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
கோல்டன் டிக்கெட்டை பெற்று கொண்ட ரஜினிகாந்த் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “எனக்கு மதிப்புமிக்க உலக கோப்பை கோல்டன் டிக்கெட் கிடைத்ததில் மகிழ்ச்சி. பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜெய் ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது தனது 170ஆவது படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதன் பிறகு ரஜினிகாந்தின் 171ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
