ETV Bharat / entertainment

HBD Balu Mahendra: பல தலைமுறைகள் கடந்து ஒளிரும் ஒளிக்கலைஞன் பாலுமகேந்திரா

author img

By

Published : May 20, 2023, 1:43 PM IST

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவிலும், கதை சொல்லலிலும் பல புதுமைகளை புகுத்திய மிகச் சிறந்த கலைஞன் பாலு மகேந்திராவின் பிறந்தநாளான இன்று, ஒரு சிறிய நினைவலைகளை பார்ப்போம்.

HBD Balu Mahendra: பல தலைமுறைகள் கடந்து ஒளிரும் ஒளிக்கலைஞன் பாலுமகேந்திரா
HBD Balu Mahendra: பல தலைமுறைகள் கடந்து ஒளிரும் ஒளிக்கலைஞன் பாலுமகேந்திரா

சென்னை: 1939ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள தமிழ்க் குடும்பத்தில் உதிக்கிறது ஒரு ஒளி. அந்த ஒளி கேமரா ஒளியாக மாற, புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு பயில்கிறது. முதலில் மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கிய இந்த ஒளி, தனக்கு சினிமா மீது தாக்கம் ஏற்படுவதற்கு சத்யஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலிதான் காரணம் எனவும் கூறி உள்ளது.

இந்த நிலையில், செம்மீன் படப்புகழ் ராமு காரியத், அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இந்த இலங்கை தமிழ் ஒளியை அழைத்தது. இந்த அழைப்புதான், 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள அரசின் மாநில விருதை இந்த இலங்கை ஒளிக்கு கொடுத்து, பாலுமகேந்திரா என்னும் விளக்கை எரியச் செய்தது.

இதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார், பாலுமகேந்திரா. கெ.எஸ்.சேதுமாதவனின் சுக்கு, ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி, சட்டக்காரி மற்றும் பி.என்.மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை இவரது முக்கியமான படங்கள். அதேநேரம், தெலுங்கில் பிரபலமான ‘சங்கராபரணம்’ படத்தை ஒளிப்பதிவு செய்ததும் இந்த அணையா விளக்கான பாலுமகேந்திராதான்.

ஒளிப்பதிவில் பல புதுமைகளை புகுத்திய பாலுமகேந்திரா, இயற்கை ஒளி கொண்டே காட்சிகளையே எடுத்தார். அது அப்போது மிகவும் புதுமையாக பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் கன்னடத்தில் மணிரத்னம் இயக்கிய பல்லவி அனுபல்லவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பாலு மகேந்திரா. பின்னர் தமிழில் முதல் முறையாக ஒளிப்பதிவு செய்த படம், இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் அசாத்தியமான நடிப்பில் வெளியான முள்ளும் மலரும்.

அதனைத் தொடர்ந்து முதல் முறையாக கன்னடத்தில் ‘கோகிலா’ என்ற படத்தை 1977ஆம் ஆண்டில் இயக்கினார். அப்படத்தில்தான் மைக் மோகன் அறிமுகமானார். அப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் முதல் முறையாக ‘அழியாத கோலங்கள்’ என்ற படத்தை இயக்கி, சினிமாவில் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் அழியாத ஒரு தொடக்கப் புள்ளியாக கவனிக்கத் தொடங்கினார், பாலு.

அன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரின் பால்ய நினைவுகளை அட்டகாசமாக படம் பிடித்து காட்டிய இவர், விடலைப் பருவத்தின் பால்ய உணர்வுகளை மெல்லிய பஞ்சு போல பறக்க விட்டிருந்தார். இவர் இயக்கிய எல்லா படங்களுக்கும் அவரே படத்தொகுப்பு என்பதுதான் அடுத்த ஹைலைட். இது இந்தியாவில் வேறு எந்த இயக்குநரும் செய்யாதது.

இவரது இயக்கத்தில் வெளியான மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, வண்ண வண்ண பூக்கள் மற்றும் சந்தியா ராகம் உள்ளிட்டவை இப்போதும் கிளாசிக் படங்களாகவே பார்க்கப்படுகிறது. மூடுபனி, மூன்றாம் பிறை போன்று மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களாகட்டும், நீங்கள் கேட்டவை, வண்ண வண்ண பூக்கள் போன்ற படங்களாகட்டும் இவரது தனித்திறமை வாய்ந்த புலமையை வெளிப்படுத்திய படங்கள் என்றே கருத முடியும்.

ஒரு நடுத்தர குடும்பத்தின் மிகப் பெரிய கனவான சொந்த வீடு கட்டுவதை ‘வீடு’ என்ற படத்தின் மூலம் உண்மைக்கு மிக நெருக்கமாக படம் பிடித்துக் காட்டியிருந்தார், இந்த ஒளி நாயகன். ஆனால், தனது தனிப்பட்ட சினிமா திரைக்கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சதிலீலாவதி படத்தை காமெடி கலந்து இயக்கினார்.

தன்னால் வயது மூப்பின் காரணமாக முடியாத வயதிலும் ‘தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கி நடித்தார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது தனி முத்திரை பதித்த பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ மூலம் கவனிக்கத்தக்க சிறுகதைகளை காட்சிப் பதிப்பாக மாற்றினார். அதில் பெரும்பாலும் அப்போது பலரும் பேசத் தயங்கியவை என்பது கூடுதல் தகவல்.

தனக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு மகத்தான கலைஞர்களை அறிமுகப்படுத்தி விட்டுச் சென்றார் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, அமீர் மற்றும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோர் இவரது மாணவர்கள்.

கதாநாயகிகளுக்கு மேக்கப் போடுவது, செட்டுக்குள் படம் எடுப்பது எல்லாம் இவருக்கு பிடிக்காத ஒன்று. வண்டு முதல் அத்தனை உயிரினங்களும் இவரது கண்கள் வழியே அழகாகத் தோன்றின. பாலு மகேந்திரா விழி வழியே வாழ்க்கையைப் பார்த்த எத்தனையோ ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை 23 படங்கள் இயக்கியுள்ள பாலுமகேந்திரா, இரண்டு படங்கள் தவிர மற்ற அனைத்து படத்துக்கும் இளையராஜாவையே இசை அமைக்க வைத்தார். அதிலும், வீடு படத்தின் இறுதிக் காட்சியில் முதியவர் கதாபாத்திரம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டைப் பார்க்கும்போது இருக்கும் பின்னணி இசை இப்போதும் புல்லரிக்கக் கூடியவை.

இதையும் படிங்க: 50 years of Ulagam Sutrum Valiban: எம்.ஜி.ஆர் என்னும் மந்திரம் செய்த மகத்தான செய்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.