ETV Bharat / crime

சென்னை ஏடிஎம் கொள்ளை: வங்கிகளிலேயே பணத்தை பதுக்கிய கொள்ளையர்கள்!

author img

By

Published : Jun 25, 2021, 9:35 PM IST

சென்னையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை வங்கி கணக்கு ஒன்றில் செலுத்தியிருப்பது காவல் துறையின் விசாரணையில் அம்பலம்.

சென்னை ஏடிஎம் கொள்ளை
சென்னை ஏடிஎம் கொள்ளை

சென்னை: சென்னையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் ஹரியானாவுக்கு சென்று அமீர் அர்ஷ் என்பவரை கைது செய்த காவல் துறையினர், அவரை சென்னை கொண்டு வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமீரை காவலில் ஐந்து நாள்கள் எடுப்பதற்கான மனுவை ராயலா நகர் காவல் துறையினர் இன்று பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அமீரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல் துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.

கொள்ளையர்களின் சமூக வலைதள பக்கங்கள் ஆய்வு

இச்சூழலில் அமீரின் பேஸ்புக் உள்பட, இவர் பயன்படுத்தும் சமூக வலலைதளங்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கைதான அமீர் இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டுகளாக வங்கி ஏடிஎம்களில் கைவரிசை காட்டி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பி.காம் பட்டதாரியான அமீரின் பேஸ்புக் கணக்கை சைபர் பிரிவு காவல் துறையினர் உதவியோடு ஆய்வு செய்து, அவரது தொடர்பு குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சியில் இருக்கும் பிற கொள்ளையர்கள் அமீரின் பேஸ்புக் பக்கத்தில் இருக்கிறார்களா? என காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் அனைவரும் ஹரியானாவில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்து அரும்பாக்கத்தில் ஜூன் 17,18,19 ஆகிய தேதிகளில் விடுதியில் தங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையில் ஈடுபடுவதற்காக அதிவேக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தை வங்களில் டெபாசிட்

கொள்ளையடிப்பதற்காக 10 வங்கி கணக்குகளை தொடங்கி அந்த கணக்கின் ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையடித்த பணத்தை ஒரு வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்பாக கொள்ளையடித்த பணத்தை விமானத்தில் கொண்டு சென்றால் சிக்க வாய்ப்பு என்பதால், கொள்ளையடித்த ஏ.டி.எம் மூலமாகவே குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியதும் அம்பலமாகியுள்ளது. அந்த 10 வங்கி கணக்குகள் குறித்து விசாரித்து கணக்குகளை முடக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அமீரிடம் இருந்து திருட பயன்படுத்திய 4 ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். அதை வைத்து விசாரணை நடத்தவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சிக்கிய கொள்ளையர்

அமீர் கொள்ளையில் ஈடுபட்ட பிறகு இதுவரை எந்த மாநில காவல் துறையிடமும் சிக்காமல் இருந்துள்ளார். தற்போது சென்னை காவல்துறையிடம் வசமாக சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக கைதான அமீரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே தெரிந்துள்ளது. காவலில் எடுக்கப்பட்ட பிறகு இந்தி தெரிந்த காவல் துறை அலுவலர்களைக் கொண்டு விசாரித்து வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஏடிஎம் கொள்ளை

இதற்கிடையில் மற்றொரு தனிப்படை காவலர்கள் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். ஹரியானா காவல் துறையினர் உதவியோடு தலைமறைவாக உள்ள, பிற வங்கி ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கும்பல் தலைவன் இஸ்மாயில்

ஹரியானா நூதன கொள்ளை கும்பலுக்கு தலைவனாக இஸ்மாயில் என்பவர் செயல்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இஸ்மாயில் டெல்லி, ஹரியானா உள்பட பல நகரங்களில் பல நூதன முறைகளில் வங்கி ஏடிஎம்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கும் மேல் இது போன்ற நூதன திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனால் இஸ்மாயில் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் சென்னை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இஸ்மாயில் சமீபத்தில் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.