ETV Bharat / city

"பாஜகவிற்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி செயல்படுவது வேதனை அளிக்கிறது" - திருமாவளவன்

author img

By

Published : Dec 11, 2020, 4:01 AM IST

வேலூர் : தன்னை விவசாயி என்று கூறிக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவது வேதனைக்குரியதென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

Chief Minister Palanisam Thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று(டிச. 10) வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை அவசர சட்டங்களாக கொண்டுவந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் குறுக்கு வழியில் மத்திய அரசு நிறைவேற்றியது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக இந்த புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

புதிய வேளாண் திருத்தச் சட்டங்களால் வேளாண் தொழில் மட்டுமல்ல அதனைச் சார்ந்து இயங்கிவரும் அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும். விளைப் பொருள்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கி பதுக்கி வைப்பதற்காக இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

கனடா பிரதமர், ஆஸ்திரேலிய அமைச்சர், லண்டன் எம்.பி.,க்கள் என உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், தன்னை ஒரு விவசாயி என கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

நடிப்பவர்களுக்கு மனு ஸ்மிருதி பற்றி என்ன தெரியும். அம்பேத்கர், பெரியாரைப் பற்றி படித்தவர்களுக்கு மட்டுமே அது பற்றி தெரியும். சனாதன சக்திகளுக்கு ஏற்ப சட்டங்களைக் கொண்டு வந்து சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் செய்துவருகின்றனர். சங் பரிவார்களின் ஏவலாளியாகவும், கார்ப்பரேட்களின் எடுபிடியாகவும் பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. இந்துக்களின் முதல் எதிரியே பாஜக தான். பாஜக இந்து விரோத கட்சி என்பதை இந்துக்கள் உணர வேண்டும்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோதே, மேடைக்கு அருகே சென்ற காவல்துறையினர் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்குமாறு கூறினர். இதனால், அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனையடுத்து, அக்கட்சியின் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அறிந்த திருமாவளவன், தனது தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தி சூழலை சுமூகமாக்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை பதாகைகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைகளில் ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க : ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி ஆரம்பிக்க மாட்டார்:எல்.கே.சுதீஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.