ETV Bharat / city

நடுராத்திரியில் உடைந்த குளக்கரை; அலுவலர்களின் கவனமின்மை - மக்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 10, 2021, 5:01 PM IST

திருச்சி மாவட்டத்தில் குளக்கரைக்கு கலிங்கி கட்டித் தராததால் நடு இரவில் குளக்கரை உடைந்துள்ளது. அலுவலர்களின் மெத்தனப்போக்கால் இவ்விபத்து நடந்துள்ளதாக ஊர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருச்சி
திருச்சி

திருச்சி: மணப்பாறையை அடுத்த சீகம்பட்டிக்கு உள்பட்டது ஆலங்குளம். சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பெய்த கனமழையால் அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. கலிங்கி இல்லாத அந்தக் குளத்திற்கு கலிங்கி கட்டித்தரக் கோரி கடந்த மாதம் மணப்பாறை பகுதியில் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள், குளத்தின் ஆயக்கட்டுதாரர்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மணப்பாறை வட்டாட்சியரிடம் அளித்த அறிக்கையின்படி நேற்று குளத்துப் பகுதியை ஆய்வுசெய்த வட்டாட்சியர் குளத்தின் மேற்குப் பகுதியில் கலிங்கி கட்டப்படும் என்று அப்பகுதி மக்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

நடுராத்திரியில் உடைந்த குளக்கரை

இந்நிலையில், இன்று அதிகாலை குளத்துப் பகுதியிலிருந்து சலசலவென நீர் செல்லும் சத்தம் கேட்டு கரைக்குச் சென்று பார்த்த அப்பகுதியினர் கரை உடைபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இது குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு அப்பகுதி விவசாயிகள் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, “இந்தக் குளத்தின் பாசனப் பரப்பை நம்பி சுமார் 30 ஏக்கர் பரப்பளவிற்கு ஆயக்கட்டுதாரர்கள் விவசாயம் செய்துவருகின்றோம்.

மனு அளித்தும் பலனில்லை

இந்தக் குளத்திலிருந்து செல்லும் வாரிப் பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் நீர் வெளியேற வழியில்லாமல் குளத்திலேயே தேங்கி நிற்கிறது. இதனால் கரைப்பகுதி பலவீனமடைந்துவிடும் என்பதால் குளத்திற்கு கலிங்கி அமைத்து வாரிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித் தரும்படி மனு அளித்தோம்.

அதன்பிறகு அலுவலர்கள் குளத்துப் பகுதியை சுமார் ஒருவாரமாகப் பார்வையிட்டுவந்தனர். நேற்று, ஆலங்குளத்தைப் பார்வையிட வந்த மணப்பாறை வட்டாட்சியர் குளத்தின் மேற்குப் பகுதியில் வாரி அமைத்துத் தருவதாகக் கூறிச் சென்ற நிலையில், குளத்தின் தரைப்பகுதியில் உடைக்கப்பட்டு நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் பாசன பரப்பு நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதற்கு முழு காரணம் அலுவலர்கள் மெத்தனமாகச் செயல்பட்டதுதான். இனியும் நடவடிக்கை எடுக்கத் தாமதமானால் சாலை மறியலில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.