ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை தீவிரம்

author img

By

Published : Dec 17, 2021, 7:23 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முன்னாள் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

நீதிபதி அருணா ஜெகதீசன்
நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் ஆயிரத்து 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது 33ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.


இதில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியிலிருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், காவல் துறை உயர் அலுவலர்கள் 18 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, உயர்ப் பதவியில் உள்ள ஐபிஎஸ் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜராஜன், சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் 17) ஐந்தாவது நாளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங், திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திவேல் ஆகியோர் ஒருநபர் ஆணையத்தில் ஆஜரானார்கள்.

அவர்களிடம் ஆணைய அலுவலர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவுசெய்தார். இன்று ஒருநபர் ஆணையம் முன்பு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், சுற்றுலாத் துறை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, சிபிசிஐடி ஐஜி ஜோஷி நிர்மல்குமார் உள்பட நான்கு பேர் ஆஜராக உள்ளனர்.

இதில் முதல்கட்ட விசாரணை நாளை (டிசம்பர் 18) வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற 27ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை விசாரணை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.