ETV Bharat / state

பள்ளி  சுவர் இடிந்து விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Dec 17, 2021, 4:16 PM IST

Updated : Dec 17, 2021, 6:02 PM IST

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக சக மாணவர்கள் சரமாரி புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சக மாணவர்கள் சரமாரி புகார்
சக மாணவர்கள் சரமாரி புகார்

திருநெல்வேலி: டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் இயங்கிவரும் சாஃப்டர் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கட்டட விபத்தில் சிக்கி அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றுவந்த நெல்லை நரசிங்கநல்லூர் சத்யா நகரைச் சேர்ந்த அன்பழகன், எட்டாம் வகுப்பு படித்து வந்த தச்சநல்லூர் கீழ இலந்தைகுளம் வெள்ளகோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வ ரஞ்சன், ஆறாம் வகுப்பு படித்துவந்த பழவூர் முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

சக மாணவர்கள் சரமாரி புகார்

கண்ணிமைக்கும் நேரத்தில்...

மேலும் நான்கு மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் இடிந்து விழுந்த சுவர் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கழிவறைக்குச் சென்ற மாணவர்கள் ஏழு பேரும் அந்தச் சுவரின் மீது கைவைத்து விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்துள்ளது.

சட்டப்படி உரிய நடவடிக்கை

இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடைபெற்றதாக அங்கு படிக்கும் சக மாணவர்கள் சரமாரியாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விபத்து நடைபெற்று 45 நிமிடம் தாமதமாகத்தான் மாணவர்களை மருத்துவனைக்கு அழைத்துச் சென்றதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கல்விக் கட்டணத்தை மட்டும் முறையாக வசூலிப்பதாகவும் கட்டமைப்பு வசதி முறையாகச் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணனிடம் கேட்டபோது, "இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். விபத்துக்கு யார் காரணம் என்று தெரியவந்த பிறகு சட்டப்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞான செல்வி மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு: தமிழிசை இரங்கல்

Last Updated :Dec 17, 2021, 6:02 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.