ETV Bharat / city

வல்லநாடு சரணாலயத்தில் மான்களை கண்டு ரசிக்க 'சூழல் சுற்றுலா' ஏற்பாடு!

author img

By

Published : May 29, 2022, 7:07 AM IST

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சரணாலயத்தில் மான்களை கண்டு ரசிக்க சூழல் சுற்றுலா தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.

வெளிமான் சரணாலயம்
வெளிமான் சரணாலயம்

தூத்துக்குடி: தூத்துக்குடி: வல்லநாட்டில் 14.6 சதுர கிலோ மீட்டர் பரப்பில் வெளிமான் சரணாலயம் அமைந்து உள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், மிளா, முயல், நரி, பலவகையான பாம்புகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளும், ஏராளமான வகை பறவைகளும் காணப்படுகின்றன. இந்த சரணாலயத்தில் மான்களை பொதுமக்கள் கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றுலா தொடங்குவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வல்லநாட்டில் வெளிமான் சரணாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 225 வெளிமான்கள், 53 புள்ளிமான்கள், 36 மிளா ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளன. இதேபோல் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 136 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் வல்லநாடு சரணாலயத்தில் 86 வகையான பறவைகள் உள்ளன. இது கண்ணால் பார்த்து கணக்கிடப்பட்டவைதான். இதைவிட அதிக அளவிலான மான்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சரணாலயத்தில் 4 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஏராளமான மான்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. இதனால் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த சரணாலயத்தில் சூழல் சுற்றுலா தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மான்களை கண்டு ரசிக்க 'சூழல் சுற்றுலா' ஏற்பாடு

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறுகையில், "சரணாலயத்தின் நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் சென்று மான்களை பார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மான்கள் எந்த இடத்தில் அதிகமாக வரும், எந்த இடத்தில் இருந்து பார்க்கலாம் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பகுதிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மான்கள் பொதுவாக புல்வெளியை அதிகம் விரும்பக்கூடியவை. இதனால் வல்லநாடு சரணாலயத்தில் புல்வெளி பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கு சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் மலைகள் மட்டுமே உள்ளன. மற்ற பகுதிகளிலும் மண் மிகவும் குறைவாக உள்ளது. அதனை பயன்படுத்தி சுமார் 100 ஏக்கர் பரப்பில் புல்வெளியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஒரே நேரத்தில் புல்வெளியை உருவாக்க முடியாது. தொடர்ச்சியான நடவடிக்கை மூலம் மான்களுக்கு தேவையான புல்வெளியை உருவாக்க முடியும்.

இந்த சரணாலயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் காடுகளை அதிகரிப்பதற்காக 4 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் 1,500 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் 334 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் சிவப்பு உடல் அழகி, ரோஜா அழகி, கறிவேப்பிலை அழகி, மரகத அழகி, எலுமிச்சை அழகி உள்ளிட்ட சுமார் 80 வகையான வண்ணத்துப்பூச்சிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். பல பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்வது ரம்மியமாக காட்சி அளிக்கும். இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் வண்ணத்துத்பூச்சி திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: கிண்டியில் வேளாண்மைத்துறை பூங்கா - பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.