ETV Bharat / city

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் உடல் சொந்த ஊரில் தகனம்

author img

By

Published : Sep 18, 2021, 10:03 AM IST

நவீன கவிஞர்களில் ஒருவரான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் (செப். 16) காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் தகனம்செய்யப்பட்டது.

மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடல் சொந்த ஊரில் அடக்கம்
மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னை: மறைந்த கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபாவின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம்செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் மூன்றடைப்பு அருகே பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்.

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகியவை இவரின் முக்கியப் படைப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.

இவர் எழுதிய கன்னி என்னும் புதினம் 2007ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் என்ற விருதைப் பெற்றது. 2008ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

கவிஞனைத் தளர்த்திய பொய் வழக்கு

ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினரால் 2019ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபா கைதுசெய்யப்பட்டார்.

ஆனால் வலிப்பு நோய் காரணமாக கீழே விழுந்து அடிப்பட்டு துடித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு பதறி தன் மடியில் வைத்து பிரான்சிஸ் கிருபா, அவரை இயல்புநிலைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார் என்று சிசிடிவி கேமரா மூலம் தெரிந்துகொண்ட காவல் துறையினர் உடனே அவரை விடுதலை செய்தனர்.

இந்நேரத்தில் இயக்குநர் லெனின் பாரதி, பத்திரிகையாளர் கவின் மலர், கவிஞர் யூமா வாசுகி, நடிகர் ராமச்சந்திரன், சமூக செயற்பாட்டாளர் ஆன்மன் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் பிரான்சிஸ் கிருபாவுக்கு தோள்கொடுத்து நின்றனர்.

தோள்கொடுத்து தேற்றிய கலை

இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஞானவேல் ராஜா, "கலைஞர்கள் வீழ்ந்து எழுவதென்பது இயல்பு. கவிஞர் பிரான்சிஸ் கிருபா தனது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க நாங்கள் உதவ முன்வருகிறோம்.

மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா உடல் சொந்த ஊரில் தகனம்

எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து அவருக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறோம்" என்று அறிவித்திருந்தார்.

இச்சூழலில், பிரான்சிஸ் கிருபாவின் மரணம் திரையுலகினரையும், கலை தாகம் கொண்டவர்களையும், வாசகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவிற்கு அனைவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.