ETV Bharat / city

ஸ்மார்ட் சிட்டி அலுவலர் திடீர் ராஜினாமா: கே.என். நேருவின் நெல்லை வருகைக்குப் பின்புதானாம்!

author img

By

Published : Jul 29, 2021, 10:01 PM IST

நெல்லை சீர்மிகு நகர் திட்டத் தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜினாமா
நெல்லை சீர்மிகு நகர் திட்டத் தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜினாமா

நெல்லை சீர்மிகு நகர் திட்டத் தலைமைச் செயல் அலுவலர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியதால் இந்த முடிவை அவர் எடுத்தார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக அமைச்சர் கே.என். நேரு நெல்லையில் ஆய்வு மேற்கொண்டது கவனிக்கத்தக்க ஒன்றாகவும் இதில் பார்க்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சியில் மத்திய அரசின் சீர்மிகு நகர் திட்டத்தின்கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. சீர்மிகு நகர் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகர் திட்டத் தலைமைச் செயல் அலுவலர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறது.

அந்தவகையில் நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத் தலைமைச் செயல் அலுவலராக நாராயணன் நாயர் இருந்துவருகிறார். இவர் தலைமையின்கீழ் நெல்லை மாநகராட்சியில் புதிய, பழைய பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்துதல் பூங்காக்கள் அமைத்தல், மிதிவண்டி நடைபாதைகள் அமைத்தல் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இளம் ஐஏஎஸ் விஷ்ணு சந்திரன்

இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத் தலைமைச் செயல் அலுவலர் நாராயணன் நாயர் இன்று திடீரென தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாராயணன் நாயரது ராஜினாமாவின் பின்னணியில் பல கோடி ரூபாய் ஊழல் சம்பவம் அரங்கேறி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நெல்லை மாநகராட்சி ஆணையராக சில மாதங்களுக்கு முன்பு இளம் ஐஏஎஸ் அலுவலர் விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டார்.

இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து சீர்மிகு நகர் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்திவந்தார். குறிப்பாக நாள்தோறும் காலை 7 மணி முதலே நகரின் பல்வேறு இடங்களில் தனி ஆளாக ஆய்வுக்குச் சென்று திட்டப் பணிகளை முடுக்கிவிட்டார்.

கே.என். நேரு வருகையும், அலுவலர் ராஜினாமாவும்

அத்தோடு திட்டம் தாமதமாவது ஏன் என்பது குறித்து சக அலுவலர்களுடன் ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார். அப்போது இதற்கு முன்பு இருந்த நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

அதற்கு சீர்மிகு நகர் திட்ட முதன்மை அலுவலர் நாராயணன் நாயர்தான் மூலக் காரணமாகச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே உடனடியாகப் பணியிலிருந்து விலகும்படி நாராயணன் நாயரை ஆணையர் விஷ்ணு சந்திரன் கேட்டுக் கொண்டதன்படிதான் தற்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு சமீபத்தில் நெல்லை மாநகராட்சியில் ஆய்வுமேற்கொண்டார். இதுபோன்ற சூழ்நிலையில் தலைமைச் செயல் அலுவலர் ராஜினாமா செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

நெல்லையில் பரபரப்பு

இது குறித்து நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டபோது, "முதன்மை அலுவலர் ராஜினாமா கடிதம் வழங்கியிருப்பது உண்மைதான். இன்று காலைதான் என்னிடம் கடிதம் வழங்கினார்.

அதில், அவர் தனது உடல்நிலை காரணமாக பணியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். விரைவில் டெண்டர் விடப்பட்டு வேறு ஒரு புதிய முதன்மை அலுவலர் நெல்லை மாநகராட்சிக்கு நியமிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.

மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் அலுவலர் ஒருவர் திடீரென தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.