ETV Bharat / city

வெளியார் நுழைய 'உள் அனுமதிச்சீட்டு' முறை வேண்டும் - தமிழ் தேசியபேரியக்கம் வலியுறுத்தல்

author img

By

Published : Oct 16, 2021, 9:59 PM IST

தமிழ்நாட்டில் நுழைகின்ற அயல் மாநிலத்தவரை கட்டுப்படுத்தும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நடைமுறையைப் போல் 'உள் அனுமதிச்சீட்டு' முறை (innerline permit) அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த சிறப்பு அனுமதியை தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை
தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை

மதுரை: தமிழ்நாட்டிற்குள் மொழிவாரி மாநில பிரிவினைக்குப் பிறகு வட மாநில மக்களின் எண்ணிக்கை பல்வேறு வகையிலும் அதிகரித்து வருவதாக, பெ.மணியரசனின் தமிழ் தேசிய பேரியக்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் மண்ணின் மைந்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோவதுடன், தமிழ்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாக பல்வேறு போராட்டங்களையும் அந்த அமைப்பு நடத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த அமைப்பை சார்ந்த கரிகாலன் கூறுகையில், "அயல் மாநிலத் தொழிலாளர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டில் பல்வேறு வகையிலும் அதிகரித்து வருகிறது. இதனால் இங்கு சிறுதொழில்களை நாம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தாய் நிலத்தில் வேலைக்கான உறுதி

அதுமட்டுமன்றி தமிழ்நாடு அரசுப்பணிகளிலும் அவர்கள் நுழைந்து வருகின்றனர். இதனை மாநில அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். அத்துடன் மதுரையிலுள்ள மக்களிடமும் கடந்த சில நாட்களாக தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 75 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டங்களையெல்லாம் பாஜக ஆளுகின்ற ஹரியானா போன்ற மாநிலங்களிலேயே இயற்றப்பட்டுள்ளன. அதேபோல் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களிலும் இயற்றப்பட்டுள்ளன.

அதுபோன்ற சட்டத்தை தமிழ்நாடு அரசும் உடனடியாக இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு சட்டத்தை இயற்றுவது அவசியம்' என்கிறார்.

மண்ணின் மைந்தர்களை பாதுகாக்க சட்டம்

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை மற்றும் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும், இந்திய சட்டப்பிரிவு 371 பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 371ஏ நாகலாந்து, 371பி அசாம் என 371ஜே வரை பல்வேறு மாநிலங்களில் சட்டமாக இயற்றப்பட்டுள்ளன. 371ஜே கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2012ஆம் ஆண்டே கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோன்ற சட்டம் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய பேரியக்கம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை

தமிழ் தேசிய ஆய்வாளர் கதிர்நிலவன் கூறுகையில், "இதுபோன்ற வெளியார் படையெடுப்பின் காரணமாக தாய் நிலம் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 6 கோடி பேர். ஆனால் 2011ஆம் ஆண்டில் 7 கோடி பேராக அதிகரிக்கிறது.

இந்த வேறுபாட்டை ஆய்வு செய்கிறபோது இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு போக கூடுதலாக 47 லட்சம் பேர் வடமாநிலத்திலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருப்பதை உணர முடிகிறது.

தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கை ஒரு கோடி பேரை தாண்டியிருக்கும் என நம்புகிறோம். எந்த ஒரு அரசாக இருந்தாலும் ஒரு தாயகத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படும் என்பது உலக நியதி. ஐரோப்பாவில் 200க்கும் மேற்பட்ட தேசங்கள் உள்ளன.

அவை ஒவ்வொன்றின் அரசுரிமையையும் இறையாண்மையையும் ஐ.நா ஏற்றுக் கொண்டுள்ளது. அதே போன்ற இறையாண்மை இந்தியாவுக்கு இருந்தாலும், இங்குள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்த இறையாண்மை உள்ளது.

சட்டங்களை சீர்செய்தால் நன்மை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்ற மக்களின் கலை, கலாச்சார, பண்பாடு, சமூக வாழ்வியலைப் பாதுகாக்கும் பொருட்டு பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட உள் அனுமதிச்சீட்டு முறையை விடுதலை பெற்ற இந்தியாவும் தொடர்ந்து அனுமதித்து வந்தது.

அதுபோன்ற சட்டம் இங்கு தேவை. தொழில் நகரங்களாக இருக்கக்கூடிய ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் வெளியாரின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மதுரையில் மின்னணு, தங்க நகை போன்ற தொழில்களிலும், சிவகாசியில் அச்சு, பருப்பு வணிகங்கள் அனைத்தும் வெளியாரிடம் சென்றுவிட்டது” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், "1953ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சட்டத்தின்படி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவே வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. ஆனால் இன்றைக்கு அந்த சட்டம் காலாவதி ஆனதை போல் உள்ளது. டிஎன்பிஎஸ்சி என்ற மாநில அரசின் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே

அதிலும்கூட கடந்த அதிமுக ஆட்சியில் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் டிஎன்பிஸ்சியில் தேர்வெழுதலாம் என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் 75 விழுக்காடு வேலைகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை" என்கிறார்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உள் அனுமதிச் சீட்டு முறைக்கு ஒப்புதல் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து பெ.மணியரசன் தலைமையில் தமிழ் தேசிய பேரியக்கம் வரும் அக்டோபர் 22ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்துகிறது.

இதையும் படிங்க :கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.