ETV Bharat / city

ஜெ. தீபா, ரஜினி குறித்து திருவாய் மலர்ந்த செல்லூர் ராஜூ

author img

By

Published : Dec 12, 2021, 4:00 PM IST

Updated : Dec 12, 2021, 5:53 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளித்தால், அவர்கள் வரலாற்றில் நிற்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற செல்லூர் ராஜூ கோரிக்கை, Veda illam into Memorial house says Sellur Raju
Veda illam into Memorial Tweet

மதுரை: பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தின. இந்த முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக சார்பாக மேல் முறையீடு செய்வோம். கட்சியின் நிதியைப் பயன்படுத்தி அந்த இடத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.

உலக சுற்றுலாப் பயணிகளை வேதா இல்லம் ஈர்க்கும்

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இடம். அங்குதான் உலகத் தலைவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார். எனவே, அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால், அங்கு வந்து இல்லத்தைச் சுற்றி பார்க்க இந்தியா மட்டுமல்லாமல் உலக சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

ஜெயலலிதா உறவினர் தீபா, தீபக் ஆகியோருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர்களாக முன்வந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அளித்தால், வரலாறு அவர்களைப் பற்றி பேசும், வரலாற்றில் நிலைத்து இருப்பார்கள். மற்ற இடங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை" என்றார்.

ஜெ. தீபா குறித்து திருவாய் மலர்ந்த செல்லூர் ராஜூ

எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிதான்

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டாவிட்டாலும், விமர்சனம் செய்ய வேண்டாம் எனக் கருத்து கூறியது குறித்த கேள்விக்கு, "நீதிபதியின் கருத்துக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், சமீபத்தில் பெய்த பெருமழையால் உணவில்லாமல் துன்பப்பட்ட மக்களைச் சந்தித்த பின் நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறியிருக்கலாம்" எனப் பதிலளித்தார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாக முதலமைச்சருக்கு விமானப்படை பாராட்டு தெரிவித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டினால் நல்லது தானே. ஆனால், அவர் மெத்தனமாக செயல்படுகிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.

பின்னர், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக் கூறிய செல்லூர் ராஜூ, தொடர்ந்து பேசுகையில், "தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்குப் பிறகு மக்கள் நலனிலும் பொது நலனிலும் அக்கறை கொண்ட ஒரே நடிகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவரின் ரசிகர் என்ற முறையில் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் மேலும் பல படங்களில் நடித்து மக்களுக்குத் தேவையான கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அண்ணா பிறந்தநாள் கைதிகள் விடுதலையில் பாரபட்சம் - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

Last Updated : Dec 12, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.