ETV Bharat / city

கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் விழா!

author img

By

Published : Jan 19, 2022, 9:17 AM IST

சிவகங்கை அருகே கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வழிபாடு
வழிபாடு

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்குத் தைலம், திருமஞ்சனம், மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு விசேஷ தீபாராதனை நடைபெற்றன.

செவ்வாய் பொங்கல் விழா

அதன்பின்னர், கோயிலைச் சுற்றி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட அடுப்புகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நாட்டரசன்கோட்டை நகரத்தார் சமூகத்தின் சார்பில் 918 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

இவை தவிர, கண்ணுடையநாயகியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்டவர்களும் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்தார்.

பின்னர் கண்ணுடைய நாயகி அம்மன் வீதி உலா எழுந்தருளினார். அப்போது, ஒவ்வொரு பொங்கல் பானைக்கு உரிய குடும்பத்தினரும் அம்மனுக்கு மாலை சாற்றியும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

மேலும், ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் வந்திருந்து வழிபட்டனர்.

ஆண்டுக்கொரு முறை கூடும் மக்கள்

இவ்விழா குறித்து நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த நகரத்தார்கள் கூறியது, 'எங்கள் முன்னோர் வழியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நிறைவுற்றவுடன் வரும் முதல் செவ்வாய்க்கிழமை கண்ணுடையநாயகி அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்குத் திருமணம் நடைபெற்றிருந்தாலும், அத்தனை பானைகளில் பொங்கல் வைப்பது சிறப்பு இதனை ஒரு புள்ளி என்போம்.

திருமண பாக்கியம் தரும் அம்மன்

திருமணமாகாதவர்களுக்கு வரன் பார்ப்பது, இவ்விழாவின் மூலம் ஒருவரை ஒருவர் சந்திக்க வைத்துப் பழக்கத்தை ஏற்படுத்துவது, நீண்டநாள் சந்திக்க நேராமல் இருந்த உறவினர்களைச் சந்திப்பது என பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்துவதற்காக இவ்விழாவை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதனை தொன்றுதொட்டு இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.

இந்தாண்டு நகரத்தார் சார்பில் 918 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டோம், என நகரத்தார் பெருமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஸ்ரீ குமரகோட்டம் முருகன் கோயில் வாசலில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.