ETV Bharat / city

’தமிழ்நாடு மாணவர்களுக்கு மாநிலத்திற்கு உள்ளே நீட் மையங்கள்’ - சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

author img

By

Published : Mar 21, 2021, 12:11 PM IST

Updated : Mar 21, 2021, 12:17 PM IST

மதுரை: ”நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே அமைக்க மதுரை மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தான் வைத்த கோரிக்கையை தேசிய தேர்வுக் கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது” என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாணவர்க்கு மாநிலத்திற்கு உள்ளே நீட் மையங்கள் - சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு
தமிழ்நாடு மாணவர்க்கு மாநிலத்திற்கு உள்ளே நீட் மையங்கள் - சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

நீட் முதுகலை தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி, நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டதை சுட்டிக்காட்டி, தேர்வர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரியிலேயே மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென சு.வெங்கடேசன், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்று கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். அக்கோரிக்கையை தேசியத் தேர்வுக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்போது பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் இன்று (மார்ச்.21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசியத் தேர்வுக் கழக நிர்வாக இயக்குனர் பேரா. பவானிந்திரா லால் மார்ச் 3ஆம் தேதியன்று அளித்த முதல் பதிலில் ”அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளப்படுமென்றும், அது முடியாதபட்சத்தில் அருகில் உள்ள மாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்படுமென்றும்” தெரிவித்திருந்தார்.

கட்டமைப்பு, நிர்வாக வசதிகளை காரணம் காட்டிய அவர், கோவிட் சூழலில் தனி மனித விலகலுக்காக அடுத்த இருக்கைகளை காலியாக விட்டு விட்டு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார். அதன் மீது மார்ச் 8ஆம் தேதியன்று மீண்டும் கடிதம் எழுதிய நான், ”கோவிட் சூழலுக்கு தனி மனித விலகல் அவசியம்; ஆகவே மையங்களில் இட நெருக்கடி என்று கூறி கோவிட் சூழலில் தேர்வர்களை வெளி மாநிலங்களுக்கு பயணிக்கச் செய்வது முரணான அணுகுமுறையல்லவா?” என்பதை சுட்டிக் காட்டினேன்.

தமிழ்நாடு மாணவர்க்கு மாநிலத்திற்கு உள்ளே நீட் மையங்கள் - சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு
தமிழ்நாடு மாணவர்க்கு மாநிலத்திற்கு உள்ளே நீட் மையங்கள் - சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

இதனையடுத்து, மார்ச் 19ஆம் தேதி அன்றைய தேசிய தேர்வுக் கழகத்தின் கடிதத்தில் ”8,131 தமிழ்நாடு தேர்வர்களுக்கும், 63 புதுச்சேரி தேர்வர்களுக்கும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. மொத்தம் 11,013 தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலும், 603 தேர்வர்களுக்கு புதுச்சேரியிலும் அஞ்சல் முகவரிகள் உள்ளன. அவர்கள் ஆன்லைன் பதிவின்போது தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்காமல் மற்ற மையங்களுக்கு பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்க தேசியத் தேர்வுக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ளும்” என உறுதியளித்துள்ளது.

என்னுடைய இந்தக் கோரிக்கையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11,600 தேர்வர்கள் பலன் பெறவுள்ளனர். கோவிட் காலத்தில் அனாவசிய பயணங்களைத் தவிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியிலேயே தேர்வு எழுதும் வாய்ப்பு கிட்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

Last Updated : Mar 21, 2021, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.