ETV Bharat / city

குற்றவாளியாக தீர்ப்பெழுதப்பட்ட வளாகத்திலேயே மாவட்ட ஆட்சியராக அமர்ந்த தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் சிறப்பு நேர்காணல்

author img

By

Published : Aug 12, 2022, 6:56 PM IST

Updated : Aug 12, 2022, 8:27 PM IST

மதுரையில் சுதந்திரப்போரட்டத்திற்காக போராடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே மாவட்ட ஆட்சியராக அமர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களுடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் மேற்கொண்ட விரிவான நேர்காணல் தொகுப்பைக் காணலாம்

குற்றவாளியாக தீர்ப்பெழுதப்பட்ட வளாகத்திலேயே மாவட்ட ஆட்சியராக அமர்ந்த தியாகி லட்சுமிகாந்தன் பாரதி சிறப்பு நேர்காணல்
குற்றவாளியாக தீர்ப்பெழுதப்பட்ட வளாகத்திலேயே மாவட்ட ஆட்சியராக அமர்ந்த தியாகி லட்சுமிகாந்தன் பாரதி சிறப்பு நேர்காணல்

மதுரை: மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசத்தலைவர்களின் கைதைக்கண்டித்து 1942ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவனாகப் படித்தபோது போராட்டம் நடத்தியதற்காக, அன்றைய மாவட்ட நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்ட, அதே வளாகத்திலேயே 30 ஆண்டுகளுக்குப்பிறகு மாவட்ட ஆட்சியராக வந்து அமர்ந்த பெருமைக்கும் புகழுக்கும் உரியவர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி.

தென்காசி மாவட்டம், நயினாகரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். தாய், தந்தை, தமக்கையரோடு இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குடும்பத்துடன் சிறை சென்றவர்.

விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்த குடும்பமும் சிறைவாசத்தை அனுபவித்த இந்தியாவின் ஒரே குடும்பம் தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் குடும்பமாகும். தற்போது 97 வயதைத் தொட்டுவிட்ட அவர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்காக சிறப்பு நேர்காணல் வழங்கினார். அவரது நேர்காணலில்,

சுதந்திரத்தின் முதல் குரல்: ”தமிழ்நாடு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகளும் பாராட்டுகளும். பொதுவாகவே, சுதந்திரநாள் ஆகஸ்ட் 15-தான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதேபோன்று ஜனவரி 26 குடியரசு நாள்.

ஆகஸ்ட் 9ஆவது நாளை நினைவில் வைத்துக்கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமாகவும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய நாளும் இந்த ஆகஸ்ட் 9 தான். இந்நாள் தான் கடைசி சுதந்திரப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள். அதற்குப்பிறகு விடுதலைப்போராட்டம் கிடையாது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 9ஆம் தேதி அதிகாலையில் தான் மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் தேசத்தின் அனைத்து தலைவர்களும் இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்ற தகவலே இல்லாமல் கடந்த 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதிதான் சுதந்திரப் போராட்டத்தின் கடைசி, ஆரம்பநாளாக அமைந்தது.

தியாகி லட்சுமிகாந்தன் பாரதி
தியாகி லட்சுமிகாந்தன் பாரதி

அந்த நாள் இந்தியா முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக கொதித்து எழுந்தார்கள். எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச்சூடுகள், தடியடிகள் நடைபெற்றன. இதையெல்லாம் விட ஐந்து இடங்களில் ஆங்கிலேயர் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து, மக்களைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு அன்று புரட்சி வெடித்தது. சுதந்திரம் வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று இந்தியா முழுவதும் மக்கள் ஒரே குரலில் கொதித்து எழுந்தனர்.

அப்படிப்பட்ட தியாகிகள் நாள் அது. தற்போது எனக்கு 96 வயது நிறைவடைந்து 97 ஆரம்பமாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று தெரியாது. ஆனால், அந்த சுதந்திரப் போராட்ட நினைவுகளை மீண்டும் உங்களோடு நினைவுகூர்வதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

கடந்த 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தபொழுது நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 16 வயது மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் பங்கேற்றதற்காக கைது செய்தார்கள்.

அப்போது, ஆரப்பாளையம் சிறையிலிருந்து தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக உள்ள நீதிமன்றம் வரை என்னை கடும் வெயிலிலேயே நடக்கவைத்து அழைத்து வந்து அலுவலகத்தின் படிகளில் ஏறி, அதன் இடதுபக்கம் உள்ள ஓர் அறையில் என்னை நிறுத்தி, ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து அழைத்துச் சென்றார்கள்.

எந்த இடத்தில் எனக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்தண்டனை விதித்தார்களோ அந்த அறையின் முன்னே தற்போது நான் நின்றபோது எனது உள்ளமெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது. புல்லரித்துப் போனேன். 16 வயதில் நமது கல்வி போனாலும் பரவாயில்லை, வாழ்க்கை போனாலும் வரவாயில்லை, நாடு விடுதலையடைய வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அந்த இடத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு நின்றபோது அளவுகடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

மதுரையில் போராட்டக் குரல்: அதே 42ஆம் ஆண்டில் மதுரையைப் பொறுத்தவரை மிகப்பெரிய சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை மாநகரில் மிகக் கொடுமையான நிர்வாகம் நடத்திய காவல்துறை அலுவலர்தான் தீச்சட்டி கோவிந்தன் என்ற விஸ்வநாதன் நாயர்.

அப்போது போராட்டம் நடத்திய தியாகிகளை அடித்துத்துன்புறுத்தி பல சிரமங்களுக்கு ஆட்படுத்தினார். அவற்றையெல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாது. மீசை வைத்திருந்தால் ஒவ்வொரு ரோமமாகப் பிடுங்கி சித்ரவதை செய்தார். அந்த அலுவலரின் மீது திராவகத்தை வீசி, தங்களது சுதந்திரப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்திய இளைஞர்கள் அன்றைக்கு இருந்தார்கள்.

அதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தியாகிகளை வாகனத்தில் ஏற்றிச்சென்று நள்ளிரவில் அவர்களின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்திவிட்டு வந்தது, அன்றைய ஆங்கிலேயே ஆட்சி. இதனால் மதுரை மக்கள் மேலும் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.

அதன்தொடர்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தின் மீது ஏறி தேசியக்கொடியை பறக்கவிட்டது மட்டுமன்றி, ஒவ்வொரு வீதிகளிலும் காங்கிரஸ் கொடியை பறக்கவிட்டு, ’மகாத்மா காந்திக்கு ஜே’ என்ற முழக்கம் எழுப்பி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அந்தக் கொடிகளையெல்லாம் ஆங்கிலேயே அலுவலர்கள் நாள் முழுவதும் அகற்றிக் கொண்டேயிருந்தார்கள்.

அந்தக்கொடிகள் அனைத்தும் எங்கள் வீட்டில்தான் உருவாக்கப்பட்டன. அந்த நாள் தியாக நாள். நினைவு கொள்ள வேண்டிய நாள். நாம் எல்லோரும் தியாக உணர்வுடன் நாட்டுப் பற்றுடன் சுதந்திரம் பெற்றதற்காகப் போராடிய, சிறை சென்ற, உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், பெற்றுத்தந்த சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தியாகி லட்சுமிகாந்தன் பாரதி
தியாகி லட்சுமிகாந்தன் பாரதி

எல்லா அதிகாரங்களும் மக்களுக்கே: ’வள்ளியம்மையின் தியாகம் வீணாகிவிடக்கூடாது என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ என அன்று வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் பேசினார். அதுபோன்று இவர்கள் எல்லாம் செய்த தியாகம் வீணாகிவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும். வெறும் மேடைப்பேச்சினால் இது வராது.

அன்று காந்தியடிகள் விரும்பிய ஆட்சி முறையான மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் ஜனநாயக ஆட்சி முறையே அவர் கேட்டார். ஆங்கிலேயர்களால் பின்பற்றப்பட்ட அதே ஆட்சி முறை நம் நாட்டில் தொடரப்படுவதை அவர் விரும்பவில்லை. ’ஹவுஸ் ஆஃப் காமன்’ என்ற முறையையே காந்தியடிகள் எதிர்த்தார். அவர்களின் சார்பாக பிரதிநிதிகள் ஆள்வதை காந்தி விரும்பவில்லை.

ஒவ்வொரு கிராமமும் தனிக் குடியரசாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அனைத்துவிதமான ஆட்சி முறை, நிர்வாகங்களையும் மக்களே முன்னின்று நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து பேசினார்.

திட்டங்களைப் போடுவது மாநில ஆட்சி நிர்வாகமாக இருந்தால், அதனை நிறைவேற்றுவது மக்கள் ஆட்சி முறையாக இருக்க வேண்டும் என்றார். சுருக்கமாக, 'எல்லா அலுவலர்களும் மக்களுக்கே' என்பதுதான் காந்தியடிகளின் முழக்கமாக இருந்தது. இதனை நன்றாக எல்லோரும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது மாநில சுயாட்சி என்று மாநிலங்கள் தங்களை ஆள்வதற்கான ஆட்சி முறையைக் கேட்கிறார்கள். அது நியாயமானதுதான். அதேபோன்று மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். அதில் தான் உண்மையான மாநில சுயாட்சி உள்ளது. கிராமத்திலுள்ள நிலங்களின் மீது முழுக் கட்டுப்பாடு உள்ளாட்சி மன்றங்களுக்கு இருக்க வேண்டும்.

’முக்கண்ணன்’ காந்தியடிகள்: ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமானால், அதனை அந்த உள்ளாட்சி அமைப்பே செய்ய வேண்டும். அனைத்துவிதமான நலத்திட்டங்களையும் அவர்களே மேற்கொள்வதுதான் உண்மையான ஜனநாயகம். ஒவ்வொரு கிராமமும் தனிக்குடியரசாகத் திகழ்வதுதான் உண்மையான ஆட்சி மாற்றம் என காந்தியடிகள் விரும்பினார்.

காந்தியடிகளை நான் ’முக்கண்ணன்’ என்றுதான் சொல்வேன். அவரது நெற்றிக் கண் ஆட்சி முறை மாற்றம் ஆகும். திமுக போய் அதிமுக வருவது ஆட்சி மாற்றம். ஆனால், காந்தியடிகள் இந்தக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அரசியலையே பேசினார். எல்லா அதிகாரங்களும் மக்களைச் சென்றடையும் ஆட்சி முறை மாற்றம்தான் காந்தியடிகளின் நெற்றிக் கண்.

தியாகிகளைக்கௌரவிக்கும் விழாவில்தியாகி லட்சுமிகாந்தன் பாரதி
தியாகிகளைக்கௌரவிக்கும் விழாவில்தியாகி லட்சுமிகாந்தன் பாரதி

காந்தியடிகள் ஒருமுறை கூறும்போது, ‘என்னை மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஒரே ஒருமணிநேரம் அறிவித்தால், இந்த நாட்டிலுள்ள கள்ளுக்கடைகளை மூடிவிடுவேன்’ என்றார். ஆக, அவரது இடது கண் மதுவிலக்கு. நாட்டு மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது அவரது வலது கண். இதற்காக, கதர் கிராமத் தொழில் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க நினைத்தார்.

இந்த மூன்றையும் நடைமுறைக்கு கொண்டு வர காந்தியவாதிகள் அனைவரும் மாணவர்கள், இளைஞர்களைத் திரட்டிப் போராட தற்போது முன் வர வேண்டும். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும் கூட நாமக்கல்லில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஜனநாயகத்தின் உயிர்மூச்சு உள்ளாட்சி மன்றங்கள் எனப் பேசியுள்ளார்.

மக்களுக்கு நேரடியாக உள்ளாட்சி மன்றங்கள் மூலமாகவே சேவை செய்யமுடியும் என காந்தியடிகளின் வாக்கியத்திற்கு விளக்கவுரையாகப்பேசியுள்ளார். இதனை அடிப்படையாகக்கொண்டு அந்தந்த பகுதிகளில் வசிக்கும் தியாகிகள், பொதுமக்களைத் திரட்டி ஊராட்சித் தலைவர்களைச் சந்தித்து, ’எல்லா அதிகாரங்களையும் உள்ளாட்சி மன்றங்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’, என்று தீர்மானம் ஒன்றை இயற்றுங்கள் என மனு கொடுக்க வேண்டும். இதன் மூலம் சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாம் தொடங்கி வைக்க முடியும்” எனக் கூறினார்.

கடந்த 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம், அதன் காரணமாக அவர் சந்தித்த பிரச்னைகள், கொடுமைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,

இளைஞர்களின் வீர முழக்கம்: “அந்தக் காலத்தில் மாணவர்களும் இளைஞர்களும் தான் சுதந்திரப் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்தார்கள். அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கீழ் மாணவர்கள் போராடினார்கள். இன்னும் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. மாணவர்களாகிய நாங்கள் ஊர்வலமாகச் சென்றபோது எழுப்பிய முழக்கங்களை நினைத்தால் இன்றும் மயிர்க்கூச்செரியச் செய்கிறது.

'நாங்கள் வேலை தேடி அலைபவர்களல்ல... சுதந்திரத்தை விரும்புகிறவர்கள்' என்று முழக்கமெழுப்பினோம். அடுத்த கோஷம் 'ரெவல்யூஷன் அப்... அப்... இம்ப்பீரியலிஸம் டவுன்... டவுன்..' 'புரட்சி ஓங்குக... ஏகாதிபத்தியம் ஒழிக..' எங்கள் மீது நடத்தப்பட்ட தடியடிகளை எதிர்த்து 'லத்தி சார்ஜ் புரூட்டல்... புரூட்டல்..' என்றோம்.

காவல்நிலையங்களை கடந்து செல்லும்போதெல்லாம் எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும். அதேபோன்று இன்றைய மாணவர்கள் ’ஆல் பவர் டூ த பீப்பிள்’, ’எல்லா அதிகாரங்களையும் மக்களிடம் ஒப்படையுங்கள்' என்ற முழக்கங்களை எழுப்பினால், அது மிகப் பெரிய பலன் தரும். அச்சமயம் நான் கைது செய்யப்பட்டு அலிப்புரம் சிறையில் இருந்தேன். அங்கு ஹவ் என்ற வெள்ளைக்காரர் தான் சிறைக் கண்காணிப்பாளராக இருந்தார்.

ஒரு கொடூரமான காலம்:இவர் சிறைக்குள்ளேயே தியாகிகள் மீது அடிக்கடி தடியடி நடத்துவார். அத்தனை கொடூரமானவர். வெள்ளைக்காரன் குதிரை லாயங்களாகப் பயன்படுத்திய கட்டடங்களில்தான் எங்களை அடைத்து சித்ரவதை செய்தார்கள். 20 குதிரைகள் இருக்க முடிகின்ற இடத்தில் நாற்பது நபர்களை அடைத்து வைத்தார்கள்.

படுத்து உறங்குவதற்குக் கூட நாற்பது பேருக்கும் இடம் கிடைக்காது. இரவில் மல ஜலம் கழிக்க வேண்டுமானால், சட்டி பானைகள் இருக்கும். மூன்று வேளை உணவு நேரத்தில் மட்டும் திறந்து, மோசமான உணவைக் கொடுத்து மீண்டும் அதே கொட்டடியில் அடைத்துவிடுவார்கள். நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. கடிதப் போக்குவரத்து கிடையாது.

இங்கு பல பேர் ஆறு மாதம் சிறைக்குச்சென்றோம் என்பதை ஒரு வாக்கியமாகக் கடந்துவிடுகிறார்கள். அந்த ஆறு மாதங்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், அவர்களெல்லாம் அதற்காக வருத்தப்படவில்லை. ஒரு லட்சியத்திற்காகவே இதனை ஏற்றிருக்கிறோம் என நினைத்து பெருமிதம் கொண்டனர்.

அப்படிப்பட்ட ஒரு கொடூரமான காலம் 1942. இன்று நாடு விடுதலையடைந்து பல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் கண்டுள்ளது. இந்த நிலையில் நாம் அந்த சுதந்திரத்தைப் போற்ற வேண்டும். அதனைப் பெற்றுத் தந்த தியாகிகளை வணங்குவோம். அந்த சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்”, என்றார்.

இந்தியாவிலேயே ஒரு குடும்பம் மொத்தமும் விடுதலைப் போராட்டத்திற்காக சிறை சென்ற வரலாறு தங்களுக்கு உள்ளது, என்பது குறித்த கேள்விக்குப் பதில் கூறிய அவர்,

சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களுடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்

யாருக்கும் கிடைக்காத பெருமை: “என்னுடைய தந்தை எல்.கிருஷ்ணசாமி பாரதி, மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் விடுதலைப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டதற்குக் காரணம், சைமன் கமிஷனை எதிர்த்து பெரிய போராட்டம் நடைபெற்றது. அது நடைபெறுகின்ற பொழுது எனது தந்தையார் சட்டக்கல்லூரியில் மாணவராகப் படித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஊர்வலத்தில் தடியடி நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற எனது தந்தையார் இன்னும் வேகங்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கடந்த 1926ஆம் ஆண்டு வழக்கறிஞராக இருந்தபோதும்கூட 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, ஒன்றரை ஆண்டுகள் சிறைக்குச்சென்றுவிட்டார்.

பிறகு 1932ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்று சிறைக்குச்சென்றார். என்னுடைய தாயாரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். எனது தந்தையார், எம்எல்ஏ, எம்பி ஆக மட்டுமன்றி, அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராகவும் இருந்தார்.

கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றிய பெருமை இந்தியாவிலேயே எனது தந்தை மற்றும் தாயாருக்கு மட்டுமே உண்டு. எனது சகோதரி அப்போது சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்று சிறைபட்டோம்.

சிறைக்கு வெளியே இருந்த தியாகிகள்: நான் சிறுவனாக இருந்தபோது பேச்சிமுத்தம்மாள் என்ற மிகப் பெரிய காந்தியவாதி இருந்தார். அவரது மகள் லாசரஸ் வடக்குவெளி வீதியில் மருத்துவராக இருந்தார். அப்போது நாங்கள் குதிரைவண்டியில்தான் பள்ளிக்கூடத்திற்குச் செல்வோம். நான் குதிரை வண்டியின் முன் பக்க பெட்டியில் அமர்ந்து செல்வேன்.

அச்சமயம் ’டவுன்... டவுன்... யூனியன் ஜாக்... அப்... அப்... காங்கிரஸ் ஃபிளாக்...’ என்று கத்திக் கொண்டே செல்வேன். அப்போது தெருவில் செல்வோரெல்லாம் என்னை வேடிக்கை பார்ப்பார்கள். அப்படியெல்லாம் ஒரு உணர்ச்சி மிக்க காலம் இருந்தது. அப்பாவும், அம்மாவும் சிறையில் இருந்து நாங்கள் வெளியில் இருந்தபோது, எங்களைக் காப்பாற்றியவர், அப்பாவின் வக்கீல் குமாஸ்தா ராஜாராயர்.

எங்களுக்கு உதவியாக வேலாயுதம் என்ற சமையல்காரர் இருந்தார். அவர்கள் இருவரும்தான் எங்களைக் காப்பாற்றினார்கள். அப்போது நாங்கள் இருந்த வீடு, தற்போதும் அங்குள்ளது. வடக்காவணி மூலவீதியில் கதவு எண் 8ல் தான் நாங்கள் இருந்தோம். எங்களது வீட்டு உரிமையாளர் கோட்டைசாமித்தேவர் ஆவார். அவரிடம் நாங்கள் மாதம் ரூ.30க்கு வாடகைக்கு இருந்தோம்.

அப்பாவும், அம்மாவும் சிறை சென்றபோது அவராகவே எங்களிடம் வந்து, பெற்றோர்கள் வரும் வரை வாடகை வேண்டாம் என்று கூறி அவரது தியாக உணர்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் சிறைக்குச் சென்றவர்கள் மட்டும் தியாகிகள் அல்ல. அவர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி புரிந்த சாதாரண பொது மக்களும் தியாகிகள்தான். அப்போது சோமசுந்தரம் செட்டியார், வயிரவன் செட்டியார் என்ற இரண்டு பெரிய நகை வியாபாரிகள் இருந்தனர்.

தடியடியினால் அடிபட்டு காயம்பட்டவர்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்துச்சென்று சத்தியாகிரக ஆஸ்பத்திரி என்ற பெயரால் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை செய்தனர். பாதிக்கப்பட்ட தியாகிகளுக்கெல்லாம் பொருளுதவியும் செய்தனர். ஆகையால் வெளியே தெரியாமல் ஆயிரக்கணக்கான நபர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுகப் பங்களித்தனர். அவர்களையும் போற்ற வேண்டியது நமது கடமை”, என்றார்.

அப்போதைய விடுதலைப் போராட்ட காலத்தையும், தற்போது நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆன இந்த காலகட்டத்தையும் எப்படி ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்..? என்ற கேள்விக்கு,

உண்மையான ராஜாஜியின் கூற்று: ”நாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இந்த 75 ஆண்டுகளில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்ளாட்சி மன்றங்களுக்கு முழு அதிகாரமும் இல்லையென்றாலும்கூட, நாட்டின் ஜனநாயக அமைப்பில் ஒரு பகுதியாக இருந்து செயல்பட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு சமமாக பிற தீய சக்திகளும் வளர்ந்துள்ளன.

1926ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி, தான் சிறையில் இருக்கின்றபோது, அவருடைய நாட்குறிப்பில் இரண்டு வாக்கியங்களை எழுதியிருந்தார். அதில், 'ஒருநாள் இந்த நாடு விடுதலை பெறும்... ஒரு அடிமை என்ற அந்த அவமானம் மட்டும் நீங்கும்... ஆனால் அந்த விடுதலை பெற்றதிலிருந்து லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடும்... அப்பாவி மக்கள் ஏன் சுதந்திரம் வந்தது என்று ஏங்குவார்கள்' என எழுதினார். இது ராஜாஜியின் தீர்க்கதரிசனம்.

இதில் ஓரளவு உண்மையாவது இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். ஏதேனும் அலுவலகத்திற்குச் சென்று நியாயமாய் செய்ய வேண்டியதைக்கேட்டால், அதனை உடனடியாகச் செய்து தருகின்ற சூழ்நிலை இருக்கிறதா..? இதனை வைத்துதான் நீங்கள் நாட்டின் நிலைமையைத் தீர்மானம் செய்ய வேண்டும்.

நள்ளிரவில் யாருடைய துணையுமின்றி நகைகள் ஏராளமாக அணிந்து கொண்ட பெண் ஒருவர் தைரியமாக தெருவில் செல்கின்ற நாள்தான் உண்மையான சுதந்திர நாள் என்று காந்தியடிகள் சொன்னார். அதுபோன்று எந்த அரசு அலுவலகத்திலாவது உங்களது நியாயமான கோரிக்கை உடனடியாக அதை நிறைவேற்றித் தருகின்ற சூழ்நிலை இருக்கிறதா?”, எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவின் மூத்த தியாகிகளுள் ஒருவராகிய நீங்கள் இந்த மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன..?, என்ற கேள்விக்கு,

“ரொம்ப சுருக்கமான செய்திதான். இதை ஒன்றும் கீதை உபதேசமாக சொல்ல வேண்டியதில்லை. ஏன் காந்தி விடுதலை கேட்டார்..? மௌண்ட் பேட்டன் போய் மன்மோகன்சிங் ஆள வேண்டும் என்றா விரும்பினார்..? நாட்டு மக்கள் நாட்டின் மீது பற்று வைக்க வேண்டும். பற்று மேடைப்பேச்சால் மட்டும் வந்துவிடாது. மூன்று காரியங்களை நாம் செய்ய வேண்டும்.

தேசப்பற்றை உருவாக்க வேண்டும்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மாதத்திற்கு ஒரு நாள் ஒரு அரைமணி நேரம் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகள் குறித்து பாடமெடுக்க வேண்டும். தேசப்பற்று, ஒழுக்கமுள்ள 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து காந்திமன்றம் என்ற பெயரில் அவர்களை ஒருங்கிணைத்து இதனைச் செய்ய வேண்டும்.

மாதம் ஒரு நாள் ஒரு போராட்ட வீரர் என்ற அடிப்படையில் அவர்களுக்குள் தேசப்பற்றை உருவாக்க வேண்டும். வீரன் வாஞ்சிநாதன் குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த வரலாறு முழுவதுமாகத் தெரியவில்லை.

அந்தக் காலத்தில் ஆஷ் என்கிற வெள்ளைக்கார கலெக்டர், காங்கிரஸ் தியாகிகளை போராட்டக்காரர்களை கொடூரமாக துன்புறுத்தி சித்ரவதை செய்தார். அவரைக் கொல்ல வேண்டுமென்று இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இது காந்தியத்திற்கு விரோதமானது. ஆனால், அந்தக் காலத்து இளைஞர்களால் அந்தக் கொடுமையை சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஆகையால், 13 இளைஞர்கள் ஒன்று சேர்கிறார்கள். செங்கோட்டை காட்டுப்பகுதியில் கூடி பேசுகிறார்கள். துப்பாக்கி பயிற்சி மேற்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் ஒரு தீர்மானம் எடுத்துக்கொள்கிறார்கள். யார் கலெக்டர் ஆஷ்துரையைக் கொல்கிறார்களோ, அவர்கள் உடனடியாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிர் துறக்க வேண்டும். போலீசாரிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது.

ஆஷ் துரையை சுட்டுக்கொன்றால், தன் உயிரும் போய்விடும் என்ற நிலையில், 13 பேருமே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற போட்டிபோடுகிறார்கள். சீட்டு எடுத்துக் குலுக்கியபோதுதான் வாஞ்சிநாதனின் பெயர் வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியவுடன் வாஞ்சிநாதனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிர் துறக்கிறார்.

வாஞ்சிநாதன் சுடத் தவறினால், இன்னொருத்தர் அதனைச்செய்துவிட வேண்டும் என்ற ஏற்பாட்டின்பேரில் மற்றொருவரும் தயாராகிறார். திட்டப்படி வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றுவிட்டார் என்றதும் இவர் அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றுவிடுகிறார். போலீசார் வாஞ்சிநாதனுடன் வந்த நபர் யார் என்று வலைவீசித் தேடுகிறார்கள்.

மூன்று நாட்கள் கழித்து கல்கத்தா மெடிக்கல் காலேஜில் அவரைக்கைது செய்து செங்கோட்டைக்கு அழைத்து வந்து இரண்டு கைகளிலும் விலங்கிட்டு நாயை இழுத்துச்செல்வதுபோல் தெருவில் இழுத்துச் சென்றார்கள். சிறைக்குள் வைத்து அவரது கையை உடைத்தார்கள்.

தியாகிகளின் வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்: அதைவிடக்கொடுமை. அவர் ஒரு சைவர். உணவில் மட்டனையும் மலத்தையும் கலந்து கொடுத்து உண்ண வைத்தார்கள். பிறகு விடுதலையாகி வெளியே வந்து இறந்து போனார். அவரது பெயர், சாவடி அருணாச்சலம். இன்றைக்கும் செங்கோட்டையில் அவரது வீடு உள்ளது.

அவரது மகனுக்கு நான் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் பேசி, அரசு வேலை வாங்கி கொடுத்தேன். 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்த மாணவர் அவர். அப்போது மெடிக்கல் பயில்கின்ற மாணவருக்கு சமுதாயத்தில் எத்தகைய மதிப்பு இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். மருத்துவப்பணியை மேற்கொண்டிருந்தால் அவருக்கு எவ்வளவு புகழ், பெயர், பணம் வந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இப்படிப்பட்ட வரலாறுகளையெல்லாம் மாணவர்களுக்குச்சொல்ல வேண்டும். இது தொடர்ந்து நடந்தால், பள்ளி, கல்லூரியை விட்டு அந்த மாணவன் வெளியே செல்லும்போது குறைந்தபட்சம் 40 தியாகிகளின் வரலாறைத் தெரிந்து கொள்வான். அவனுக்குள் தேசப்பற்றும் பொங்கியெழும். தியாக வரலாறுகளை தெரியப்படுத்தாதவரை மக்களிடம் நாட்டுப்பற்றை உண்டு பண்ண முடியாது.

அடுத்ததாக மாதம் ஒரு நாள் அனைத்து அரசு அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் கதராடை உடுத்துவதை இயக்கமாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இன்று அரசு அலுவலர்கள் அனைவரும் கதராடை உடுத்தியுள்ளனர் என்றாலே எத்தனை பெருமிதமாக இருக்கும்.

இதனை ஒரே உத்தரவின் மூலம் அரசு செயல்படுத்த முடியும். இதன் வாயிலாக காந்தியின் கனவுகளில் சிலவற்றையாவது நனவாக்க முடியும் என நான் நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: "கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்"

Last Updated : Aug 12, 2022, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.