ETV Bharat / city

'வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பம்' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

author img

By

Published : Feb 19, 2022, 11:15 AM IST

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மாநில தேர்தல் ஆணையம் பெரும் குழப்பம் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

ex minister sellu raju
செல்லூர் ராஜூ

மதுரை: கோரிப்பாளையம் அருகே உள்ள மீனாட்சி மகளிர் அரசினர் கலைக் கல்லூரியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (பிப். 19) தனது குடும்பத்தாருடன் வாக்கு செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெரும் குழப்பம் செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு வார்டைச் சேர்ந்த வாக்காளர்களை வேறொரு வார்டில் இணைத்துள்ளனர். இது போன்ற நிறைய குளறுபடிகள் உள்ளன.

திமுகவை பொறுத்தவரை அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நடைபெறுகின்ற தேர்தல்களில் அத்துமீறலை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது இந்தத் தேர்தலிலும் நடைபெறுகிறது. நடிகர் விஜய் வாக்களித்தது என்பது ஜனநாயகத்தின் மீதுள்ள அவரது பற்றுதலை காட்டுகிறது. ஆகையால் இது குறித்தெல்லாம் விமர்சிக்க ஒன்றுமில்லை. எங்களைப் பொறுத்தவரை திமுக தான் எங்களது போட்டி. பிற கட்சிகளை எல்லாம் நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை.

செல்லூர் ராஜூ

யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற விவிபேட் இயந்திரங்கள் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்படவில்லை. இது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலவிய மக்கள் மனநிலை தற்போதைய நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இல்லை. தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்ட போது மக்களின் மனநிலையை நான் அறிந்தேன். ஆகையால் இந்தத் தேர்தலில் ஆளும் திமுக அரசுக்கு நிச்சயம் படிப்பினையாக அமைவதோடு அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... காரணம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.