ETV Bharat / city

'ஸ்டாலின் இல்லாத கம்யூனிச மாநாடா?' - உரிமையுடன் தோழர்களை வம்பிழுத்த திமுக தலைவர்!

author img

By

Published : Feb 19, 2021, 10:14 AM IST

மதுரை: 'சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோலதான் இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை அழைத்திருக்கிறார்கள்' என திமுக தலைவர் பேசியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திமுக தலைவர் ஸ்டாலின் உரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை

மதுரையில் நேற்று (பிப். 18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ஸ்டாலின் இல்லாத கம்யூனிச மாநாடா?

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோலதான் இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை அழைத்திருக்கிறார்கள். திராவிட கட்சி இல்லையெனில் கம்யூனிச கட்சியை ஏற்றுக்கொண்டிருப்பேன் என கருணாநிதி கூறியுள்ளார்" என்றார்.

மோடியின் மறுகரம் கார்ப்பரேட்

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது பாஜக. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மோடி ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையை உயர்த்தியுள்ளார். ஊழல் கரங்களை உயர்த்தி ஊழலுக்கு உதவி செய்வதை வெளிப்படுத்தியுள்ளார்.

மோடியின் ஒரு கரம் காவி; மறு கரம் கார்ப்பரேட்; அத்தோடு ஊழலையும் கரம் கோத்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த மோடி ஔவையார் பாடலை கூறலாமா?

பெட்ரோல், டீசல் விலை

மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மோடி அரசு தொடர்ந்து மக்களுக்குத் தரும் பரிசு.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துகூட தட்டிக்கேட்க முடியாத அரசாக - மாநில உரிமைகளைத் தாரைவார்க்கும் அரசாக தமிழ்நாடு உள்ளது" என்று விமர்சித்தார்.

மேலும், "மதுரையில் எய்ம்ஸ் மோடி அரசு மனதுவைத்தால் வரும் என்ற நிலைமாறி இப்போது ஜப்பான் நிதி கொடுத்ததான் வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தரவில்லை.

உரிமையை மீட்போம்!

எடப்பாடி அரசை ஒரு அரசாகவே மத்திய அரசு மதிக்கவில்லை. வரும் தேர்தல் நிகழ்காலத்திற்கு அல்ல; எதிர்காலத்திற்கான முக்கியத் தேர்தல். பாசிச பாஜக ஆட்சிக்கும் அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உரை

உன்னத தலைவர்களால் உரம்போட்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டில் இழந்த உரிமையை மீட்கப் பாடுபட வேண்டும்" என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: EXCLUSIVE: 'தலைசிறந்த அலுவலர்களை உருவாக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி'

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.