ETV Bharat / city

தூத்துக்குடி - நெல்லை சாலையில் பாலம் கட்டியதில் முறைகேடு - நீதிமன்றம் எச்சரிக்கை

author img

By

Published : Dec 2, 2021, 6:24 AM IST

90 நாள்களில் பாலம் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு எச்சரிக்கைவிடுத்தனர்

.
.

மதுரை: தூத்துக்குடியிலிருந்து நெல்லை நோக்கிச் செல்லும் வல்லநாடு பாலம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நவம்பர் 30ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலம் சீரமைப்புப் பணிகள் பரிந்துரையை டெல்லி என்.ஹெச்.ஏ.ஐ. தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் அளித்து 90 நாள்களில் பணிகள் முடிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் கூறியுள்ளது.

இன்னும் 90 நாள்களில் பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு எச்சரிக்கைவிடுத்தனர்.

மேலும், பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது குறித்து முழுமையான அறிக்கை அளிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பலமிழந்த பாலம் - பத்து அடியில் விரிசல்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "நெல்லை - தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை இடையில் தாமிரபரணி ஆறு கடக்கிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இரண்டு தடத்திலும் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம் 2012இல் திறக்கப்பட்டது.

100 ஆண்டுகள் உத்தரவாதம் அளித்த நிலையில் 2017இல் நெல்லை - தூத்துக்குடி செல்லும் பாலத்தில் 10 அடி நீளத்திற்கு கான்கிரீட் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்தது. பாலம் பலம் இழந்துள்ளதால் எந்த நேரமும் இடிந்துவிழும் இடர் உள்ளது. பாலம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது. தரமற்றப் பொருள்களைக் கொண்டு பாலங்களைக் கட்டியுள்ளனர்.

உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

எனவே, பலம் இழந்துள்ள பாலங்களை அகற்றிவிட்டு, தரமான புதிய பாலங்கள் கட்டவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

டில்லி என்.ஹெச்.ஏ.ஐ.வின் ஒப்புதல் - தேவை

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தரப்பில், தற்காலிகமாக பாலத்தின் வலதுபக்கம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆய்வு பரிந்துரைப்படி ரூ.21.427 கோடியில் பராமரிப்பு - சீரமைப்புப் பணிகள் பரிந்துரையை டெல்லி என்.ஹெச்.ஏ.ஐ. தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் அளித்து 90 நாள்களில் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் முக்கியம் இல்லை, பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதுதான் முக்கியம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு கட்டணம்

போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறை கருத்தில்கொண்டு டெல்லி என்.ஹெச்.ஏ.ஐ. தலைவர் முன்னுரிமை அளித்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், பாலம் பணி எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது குறித்து என்.ஹெச்.ஏ.ஐ. அறிக்கையளிக்கவும், 90 நாள்களில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் சுங்கச்சாவடியில் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் எனக் கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இடிந்து விழுந்த சுரங்கம்... தண்ணீரே உணவு... 4 நாள்களுக்கு பின் உயிருடன் திரும்பிய தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.