ETV Bharat / city

13ஆம் நூற்றாண்டின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

author img

By

Published : Mar 3, 2022, 8:18 PM IST

பரளச்சியில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள்

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள பரளச்சியைச் சேர்ந்த பாபு, ஜான் மருது ஆகியோர் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோயிலில் இருந்த இரண்டு பழமையான கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.

இக்கல்வெட்டை, மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் உதவியுடன் ஆய்வு செய்ததில் இரண்டு கல்வெட்டுகளும் சுமார் கி.பி. 700 ஆண்டுகள் பழமையானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.

மதுரையை மீட்ட பாண்டியன்

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, 'பிற்கால பாண்டிய மன்னர்களில் தலைசிறந்தவர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216- 1238). இவர் சோழர் ஆதிக்கத்திலிருந்து மதுரையை மீட்ட பெருமைக்குரியவர். இதனாலேயே இவர் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என அழைக்கப்படுகிறார்.

பழமையான கல்வெட்டுகள் பற்றி காணலாம்

இவரது ஆட்சிக் காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கும், நந்த தீபம் ஏற்றுவதற்கும், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், கோயில் பராமரிப்புகளுக்கும், எத்தனையோ பல ஏக்கர்களில் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் கோயில்களுக்கு (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது. அவ்வாறான நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் கோயில் பராமரிக்கப்பட்டது. இவற்றை 'தேவதானம்' என்று அழைப்பர்.

மெய்க்கீர்த்தி

சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நில தானம் 'திருநாமத்துக்காணி' என்றும் பெருமாள் கோயிலுக்கு வழங்கும் நில தானம் 'திருவிடையாட்டம்' என்றும் சமணம் மற்றும் புத்த பள்ளிகளுக்கு வழங்கும் நில தானம் 'பள்ளி சந்தம்' எனவும் அழைக்கப்படுகிறது.

முதல் கல்வெட்டு
முதல் கல்வெட்டு

பரளச்சி கிராமத்தில் கண்டறியப்பட்ட மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் கல்வெட்டு, சுந்தரவல்லி அம்மன் கோயில் வளாகத்தின் உட்பகுதியில் 4½ அடி நீளம், 1½ அடி அகலம் 9 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டில், "ஸ்ரீ மாறன் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் தேவர்க்கு யாண்டு" என சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி கல்வெட்டு வரிகளைக் கொண்டிருந்தது.

நில அளவைகள்

மேலும் அந்தக் கல்வெட்டில், ஈஸ்வரமுடைய நாயனார் என்ற சிவன் மற்றும் பெருமாள் கோயிலுகளுக்கு பேரிகை, சங்கு மற்றும் பூஜை செய்வதற்கான நிலங்கள் தொடர்பானக் குறியீடுகளும், அரை மா, அரைக்காணி, முந்திரி, கீழரை போன்ற நில அளவை முறையும் நிலத்திற்குத் தேவையான நீர்ப்பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கல்வெட்டு
இரண்டாம் கல்வெட்டு

குறிப்பாக "திருவிடையாட்டத்திற்கு கிழக்கே எல்லையும், மேற்கு வாய்க்கால்களுக்குத் தென்கிழக்கு எல்லையும் திருவிடையாட்டத்திற்கு மேற்கு எல்லை செங்குளத்தில் வடக்கு எல்லை என நிலத்தின் நான்கு எல்லைகளைக் குறிப்பிட்டு விளைச்சல் பொருள்களை மாகனத் தேவனன் தமிழ்நாட்டரையன் என்பவன் கோயிலுக்கு இவ்வுலகம் உள்ளவரை தானம் வழங்க வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கல்வெட்டில், கோயிலின் முன்பு குளத்தங்கரையில் 1 அடி அகலம், 4 அடி நீளம், 6 வரி கொண்ட கருங்கல்லின்மீது தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லை, குளம், இறையிலி போன்ற சொற்கள் இருப்பினும் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தை வைத்து இதன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்" என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையின் இளம் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர் - 340 ஆண்டு மேயர் வரலாற்றில் ஒரு மைல்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.