ETV Bharat / city

அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல், திரும்ப அனுப்பியிருக்கலாம்... கூக்குரலிட்ட இலங்கைத்தமிழர்கள்

author img

By

Published : Aug 23, 2022, 9:55 PM IST

Updated : Aug 24, 2022, 12:31 PM IST

ஈரோடு நீதிமன்றத்திற்கு திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இலங்கை அகதிகள் நீதிமன்ற வளாகத்தில் சிறைக்குள் சித்திரவதைகள் நடப்பதாகவும்; அதனை தமிழ்நாடு முதலமைச்சர் விசாரிக்க வேண்டும் எனவும்கோரி திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: திருச்சி மத்திய சிறையில் அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள இலங்கையைச்சேர்ந்த 3 பேரை ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, சிறைக்குள் தங்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும்; தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதிக்க மறுக்கின்றனர் எனவும்; தங்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறார்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைத்து, சிறப்பு முகாமில் என்ன நடக்கிறது? என்பதை விசாரணை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி இலங்கை அகதிகள் மூவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கைதானவர்களை விசாரணைக்கைதிகளாக உள்ளனர். இங்கு, நாமக்கல் அகதிகள் முகாமைச் சேர்ந்த கெட்டியன்பாண்டி (எ) ராஜன், பொள்ளாச்சி அகதிகள் முகாமைச்சேர்ந்த தர்மகுமார், தீபன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கின் விசாரணைக்காக இன்று (ஆக.23) மாலை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி மாலதி விசாரணை நடத்தி, மீண்டும் வரும் செப். 5ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மூவரையும் வேனில் ஏற்றி, அழைத்துச்செல்ல போலீசார் முயன்றபோது, கெட்டியன்பாண்டி, தர்மகுமார், தீபன் ஆகியோர் திடீரென நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல், திரும்ப அனுப்பியிருக்கலாம்... கூக்குரலிட்ட இலங்கைத்தமிழர்கள்

அப்போது, கெட்டியன்பாண்டி என்ற ராஜன் கூறியதாவது, 'திருச்சி சிறப்பு முகாமில் எங்கள் பெற்றோர், குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை. நாங்க அனுமதி இல்லாமல் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். எங்களுக்கு அனைவரிடமும் பேச உரிமை உள்ளது. நாங்கள் முகாமிற்குள் செல்லும்போது, எங்களது செல்போன் ஐஎம்இ எண்ணை தெரிவித்துவிட்டுத் தான் செல்கிறோம். டெல்லியில் இருந்து என்ஐஏ முகாமிற்குள் உள்ளே வந்து சென்றுவிட்டதால், செல்போன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகக் கூறி பறிமுதல் செய்துவிட்டனர்.

இன்று காலை திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்கள்மீது தடியடி நடத்தியுள்ளனர். நாங்கள் இந்தியாவுக்கு எந்த துரோகமும் செய்தது கிடையாது. எப்படி நீங்கள் எங்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, பச்சை குத்துவீர்கள். இப்படி செய்வதற்கு நீங்கள் நாங்கள் இந்தியாவிற்கு வந்தபோது அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல், திரும்ப அனுப்பியிருக்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் எங்களுக்கு தொப்புள் கொடி உறவு. நாங்கள் உங்களையும், உங்களது ஆட்சியையும் மதிக்கிறோம்.

இந்த மாதத்தில் தான் முகாமில் இருந்த 30 பேரை விடுதலை செய்துள்ளீர்கள். ஆனால், உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜகவுடன் சேர்ந்து, எங்க 3 பேரை என்கவுன்ட்டர் செய்யப் பார்க்குறாங்க. ஆட்சியை கலைக்கப் பார்க்குறாங்க. முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைத்து, சிறப்பு முகாமில் என்ன நடக்குது என்பதை விசாரணை நடத்த வேண்டும்’ என்பனவற்றை போலீசாரின் தடையை மீறி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் வேனில் ஏற்றி திருச்சி முகாமிற்கு அழைத்துச்சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்..இலங்கை பெண் சென்னையில் கைது

Last Updated : Aug 24, 2022, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.