ETV Bharat / city

ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர் அணையின் மேல் பகுதியை மக்கள் பார்வையிட அனுமதி இல்லை!

author img

By

Published : Jul 31, 2022, 7:57 PM IST

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு விழா

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டுதோறும் ஆடி 18ஆம் பெருக்கு(ஆகஸ்ட் 3) அன்று ஒருநாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

இதனையொட்டி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணையின் மேல் பகுதியைப்பார்வையிட வருவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்ட உயரம் 100.68 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்புக்கருதி இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு அன்று பவானிசாகர் அணையின் மேல் பகுதியைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 100.68 அடிக்கும் மேல் உள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு கால பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது.

ஆகவே, அணையின் பாதுகாப்புக்கருதி ஆடி 18ஆம் பெருக்கு அன்று அணையின் மேல் பகுதியைப் பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அணையின் மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை எனவும், அதே சமயம் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் செயல்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) பவானிசாகர் அணையின் பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், அணையின் மேல் பகுதியைப்பொதுமக்கள் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும், பவானிசாகர் அணையின் மேல்பகுதியைப்பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: Video: காண்போரை பரவசப்படுத்தும் மயிலின் அழகிய நடனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.