மரத்தூள்கள் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்து அசத்தும் நபர்

author img

By

Published : Jan 30, 2022, 11:10 PM IST

இளைஞர்

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக முற்றிலும் இயற்கையான முறையில் மரத்தூள்கள், வைக்கோல், நெல் தவிடு, வாழைநார் கொண்டு எளிதில் மக்கும் வகையில் வீட்டு உபயோகப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகிறார், கோவைவாசி ஒருவர். அவர் குறித்த இத்தொகுப்பில் காண்போம்.

கோவை: மனிதனுடைய அறிவியல் வளர்ச்சியின் விளைவாக நாள்தோறும் புதிய புதிய பல கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மனிதனுக்கு நன்மை அளிப்பதைக் காட்டிலும் ஆபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன.

ஆண்டு ஒன்றுக்கு உலகளவில் 80 மில்லியன் பிளாஸ்டிக் ஆனது உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்கள் முழுவதும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டு, மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மலிவான விலையில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் உலகத்தில் வந்து, தற்போது அதுவே சுற்றுச்சூழலுக்கு மிகப்பரிய எதிரியாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முன்னர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மஞ்சள் பைத் திட்டம்

இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு மாநிலங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை உள்ளதால், அதற்கு மாற்றான பொருள்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும், பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தட்டுகளைக் குறைக்கப் பாக்குமட்டைகளில் உருவான தட்டுகள், தம்ளர்கள் மற்றும் பேப்பர் தம்ளர்கள் அதிகப் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் "மஞ்சப்பைத் திட்டத்தை’’ அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் செல்வோர் பிளாஸ்டிக் மூலமான பைகளைத் தவிர்த்து துணியால் ஆன பைகளைப் பயன்படுத்த இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு

இந்த நிலையில் பாக்கு மட்டையில் தட்டுகள் மற்றும் தம்ளர்கள் தயாரித்து வந்தாலும், தற்போது பாக்கு மட்டைகள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

கோவை அருகே அதற்கு மாற்றாக வாழைநார், வைக்கோல், நெல் தவிடு ஆகியவையால் தயாரிக்கும் தம்ளர்கள், தட்டுகள் மற்றும் உணவகங்களில் பார்சலுக்கு பயன்படுத்தப்படும் டப்பாக்கள் தயாரிக்கும் பணியும்; அதனைத் தயாரிக்கும் இயந்திரங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

புதிய தொழில்நுட்பம்

காரமடை அருகே உள்ள மத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கல்யாணக்குமார். இவர், தற்போது புதிய வகை தம்ளர்கள் மற்றும் சாப்பாட்டுத் தட்டுகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வெற்றிக் கண்டுள்ளார். மேலும், அந்தப் பொருட்கள் தயாரிக்கக்கூடிய இயந்திரங்களையும் அவரே உருவாக்கி விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

மரத்தூள்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

இந்நிலையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இவர் செய்து வரும் இயற்கையான முறையிலான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்து, தமிழ்நாடு அரசுக்குத் தெரியப்படுத்தபட்டது. அதன் தொடர்ச்சியாக, இவரது தயாரிப்புகளை அரசு கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கல்யாணக்குமார் கூறுகையில், ’நான் பட்டப்படிப்பை இடையில் நிறுத்திய பின், ஆரம்பத்தில் பாக்குமட்டை தட்டுகள், தம்ளர்கள் ஆகியவை தயாரித்து வந்தேன். பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் எனது தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விடா முயற்சியில் வெற்றி

ஆரம்பத்தில் பாக்கு மட்டைகளான மட்கும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதற்கான மாற்று என்ன என்பது குறித்து யோசித்தேன். அதன் தொடர்ச்சியாக, வாழை நார், நெல் தவிடு, மரத்தூள், வைக்கோல் ஆகியவை கொண்டு தட்டுகள் மற்றும் தம்ளர் ஆகியோர் உருவாக்க முடிவு செய்து அதற்கானப் பணிகளை மேற்கொண்டேன்.

பின்னர் இதனைத் தயாரிக்கும் இயந்திரங்களையும் நானே உருவாக்கத் திட்டமிட்டு வேலை செய்ததன் பலனாக அந்த இயந்திரம் உருவாக்கப்பட்டது.

தனது தந்தை ஆரம்பகாலத்தில் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் எளிதில் இயந்திரங்களை உருவாக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றானது

மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, இவை உள்ளதால் இவற்றுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் போதுமான அளவுக்கு தங்களால் ஆர்டர் வழங்க முடியாத நிலை உள்ளது.

தனது தயாரிப்பை காபி ரைட்ஸ் வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். விரும்புவோருக்கு குறைந்த விலையில் இயந்திரங்கள் செய்துதருவதாகவும், தங்களுடைய நிறுவனங்களுக்கு ஏற்றார்போல், இயந்திரங்களைத் தான் வடிவமைத்துக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு அலுவலகங்களில் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருட்களைக் கொள்முதல் செய்ய தன்னிடம் கேட்டதாகவும் விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் தன்னுடைய தயாரிப்புகளும், தன்னுடைய இயந்திரமும் விற்பனைக்குச் செல்லும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: "நீட் தேர்வு மட்டும் இல்லாமல் தேசியகல்விக் கொள்கையையும் எதிர்க்க வேண்டும்!" - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.