ETV Bharat / city

'யாஸ்' புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு? - சிறப்பு அலசல்

author img

By

Published : May 28, 2021, 10:27 PM IST

Updated : May 28, 2021, 10:58 PM IST

நேற்று முன்தினம் (மே 26) ஒடிசா அருகே கரையைக் கடந்த ’யாஸ்’ புயல், தென் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரியை எப்படி பாதித்தது; ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதை விவரிக்கிறது இக்கட்டுரைத்தொகுப்பு...

யாஸ் புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன சம்மந்தம், YAAS CYCLONE, THE REASON WHY YAAS CYCLONE AFFECTED KANNIYAKUMARI, KANNIYAKUMARI, கன்னியாகுமரி, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் கே ஸ்ரீகாந்த், யாஸ் புயல்
யாஸ் புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன சம்மந்தம்?

சென்னை: வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது. இந்தப் புயலிற்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் 'யாஸ்' என்று பெயரிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் புயல், அதிதீவிரப் புயலாக கடந்த செவ்வாய்க்கிழமை (மே 25) உருவெடுத்தது.

வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசாவில் தாம்ரா - பாலாசூர் இடையே நேற்று முன்தினம் (மே 26) கரையைக் கடந்தது. எனினும், இந்தப் புயலானது ஒடிசாவில் கரையைக் கடந்தாலும், நீண்ட தொலைவிலுள்ள தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தப் புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இந்த மாவட்டம் பலத்த சூறைக்காற்றுடன் கனமழையைப் பெற்று வெள்ளப்பெருக்குடன் பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கிறது. இதற்குக் காரணம் 'ஈரப்பத ஈர்ப்பு' என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

யாஸ் புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு?
தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர், கே.ஸ்ரீகாந்த், கூறுகையில், "வடக்கு வங்க கடலில் புயல் மையம் கொண்டிருக்கும் சமயங்களில், அதன் 'ஈரப்பத ஈர்ப்பு' தென் தமிழ்நாட்டின் மேல் பெரும்பாலும் செல்லும். இந்த முறையும் யாஸ் புயல், வட - வட மேற்கில் நகரும் போது ஏற்பட்ட ஈரப்பத ஈர்ப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல் அதிகமாக இருந்தது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அதன்தொடர்ச்சியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கன மழை பெய்தது" எனக் கூறிய அவர் "எந்த ஒரு புயலும் ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகரும்போதெல்லாம், தென் மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்" என்றார்.

தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் கே.ஸ்ரீகாந்த்
தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் கே.ஸ்ரீகாந்த்

மத்திய வங்க கடலில் மே 23ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவான நிலையில், 24ஆம் தேதியன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 25ஆம் தேதியன்று புயலாக வலுப்பெற்றது எனக் கூறிய ஸ்ரீகாந்த், இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கையும் விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

கன்னியாகுமரியில் மழை தொடரும்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர், பாலச்சந்திரன் நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில்,"யாஸ் புயல் நகர்வின்போது அதிவேக காற்று நல்ல ஈரப்பதத்துடன் மேற்குத்திசை நோக்கி சுமார் ஆயிரம் கி.மீ., வேகத்தில் வீசியது. இந்த காற்றானது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடக்கும்போது கனமழையை விட்டுச்சென்றது. இதனால், அருகில் உள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது" என்றார்.

யாஸ் புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன சம்மந்தம்? - சிறப்பு காணொலி

மேலும், தென்மேற்குப் பருவமழை உருவாக சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், இது தீவிர கன மழைக்கு மேலும் ஒரு காரணியாக அமைந்தது என பாலச்சந்திரன் கூறினார். "கன்னியாகுமரியில் அடுத்த சில தினங்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும்" எனவும் கூறினார்.

பாதிக்கப்படும் கன்னியாகுமரி

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில், நம்மிடம் கூறியதாவது, "பெரும்பாலான புயல்களினால் கன்னியாகுமரி மாவட்டம் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.

எனவே, அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முறையான எச்சரிக்கையை உரிய காலத்தில் விடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அதிக அளவில் மீனவர்கள் செல்வதால் அரசு மழைக்காலங்களில் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்" எனவும் கூறினார்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொது செயலாளர் சர்ச்சில்
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொது செயலாளர் சர்ச்சில்

தமிழ்நாட்டில் இது மீன்பிடித் தடைக்காலம் என்பதால் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இல்லையெனில் பெரும்பாலான மீனவர்கள் இந்தப் புயல் மூலம் பாதிக்கப்பட்டிருக்கில்லாம், என்கிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.

இதையும் படிங்க: யாஸ் புயல் தாக்கம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி மாவட்ட கிராமங்கள்!

Last Updated : May 28, 2021, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.