ETV Bharat / city

தமிழ்நாடு அரசுக்கு தங்கர்பச்சான் வேண்டுகோள்!

author img

By

Published : May 9, 2021, 11:54 AM IST

நிலைமை கை மீறி சென்றுவிட்ட நிலையில் ஊரடங்கு என்பது தற்போதைய சூழலில் கட்டாயமான ஒன்றுதான். ஊரடங்கினாலோ, அதை தொடர்ந்து நீடிப்பதினாலோ கரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டுவிட முடியாது என இயக்குநர் தங்கர்பச்சான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Thangar bachan writes Letter to m.k.stalin
Thangar bachan writes Letter to m.k.stalin

தமிழ்நாடு முதலமைச்சருக்கு இயக்குநர் தங்கர்பச்சன் எழுதியுள்ள கடிதத்தில், "ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருவதினாலோ நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதினாலோ இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாது. நிலைமையின் தீவிரத்தை தொலைநோக்கு பார்வைகொண்டு உணராமல், கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்கு காரணம்.

சோதனை செய்துகொள்ளவே தயங்கும் இம்மக்கள் சோதனை செய்து கொண்டாலும் இரண்டு நாள்கள் கழித்தே மருத்துவ அறிக்கையை தெரிவிக்கின்றனர். அதற்குள் தொற்று தீவிரமாகி நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. நோய் தாக்கி மருத்துவம் மேற்கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது.

அரசு மருத்துவமனைகளிலோ இடமில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் தற்போது இதே நிலைதான். தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் நோய் கண்டறியவே இரண்டாயிரம் ரூபாய் மூன்றாயிரம் ரூபாய் என அவரவர்களின் விருப்பத்திற்கேற்றபடி வசூலிக்கின்றனர்.

ரூ. 8ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை நுரையீரல் சோதனைக்காக பெறுகின்றனர். இவை தொடர்பான மற்ற ரத்தப்பரிசோதனைகளுக்கும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்களிடமிருந்து மருத்துவ சோதனை எனும் பெயரில் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இதுபோக மருத்துவனையில் உள்நோயாளியாகும் நிலை ஏற்பட்டு விட்டால் அவர்கள் கேட்கின்ற பணத்தைதராமல், வெறும் உடலைக்கூட திருப்பித்தர மாட்டார்கள். பணம் படைத்தவர்களால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும். மாத ஊதியத்தை நம்பியும், நாள் தோறும் உழைத்து வாழும் இம்மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது.

என்னுடைய அனுபவத்தில் இதைக்கூற கடமைப்பட்டுள்ளேன். தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது. புதிய அரசு மிக விரைவாக நிலைமையை சமாளித்து நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் இதைச் செய்வது அவசியம் என எண்ணுகின்றேன்.

நோய் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீன நாடு இன்று மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் கையாண்ட பல தலைமுறைகள் கையாண்ட பாரம்பரிய மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கரோனாவை முற்றிலுமாக ஒழித்தார்கள். இதைத்தான் நம்முடைய இந்திய அரசும் உடனடியாக செய்திருக்க வேண்டும்.

இவ்வளவு பேரழிவை சந்தித்த பிறகும் தயங்குவதன் நோக்கம் தான் என்ன? சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நம்மிடம் உள்ளதாகக் கூறுகின்றனர். இதை தவிர்த்து ஹோமியோபதி மருத்துவமும் கரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறந்த வெற்றி கண்டிருக்கின்றது. இத்துடன் ஆயுர்வேதம் மருத்துவத்தையும் இணைத்து இம்மூன்று மருத்துவர்களையும் கொண்ட உடனடி மருத்துவ மையங்களை உருவாக்கலாம்.

இதற்கான பெருத்த செலவுகளை அரசு சந்திக்க நேராது. ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிக்கூடங்கள் போன்ற அரசு கட்டிடங்களை சிகிச்சை மைய்யங்களாக உருவாக்கலாம். இதைச் செய்தாலே தொடக்க நிலையிலேயே கரோனா தொற்று கட்டுக்குள் வந்து விடும். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு மருத்துவ மனைகளைத்தேடி தஞ்சமடைய வேண்டி இருக்காது.

எனக்குத்தெரிந்த சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை இல்லாமலேயே முழுமையாக குணப்படுத்தி விடுகின்றனர். தயவு செய்து பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக அரசு இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நோயிலிருந்தும் உயிர் இழப்பிலிருந்தும் காப்பாற்றுங்கள்.

இதைச் செய்வதால் தொற்று ஏற்பட்டால் பணத்துக்கு எங்கே போவது எனும் மக்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஊரடங்கையும் நீடிக்கத் தேவையில்லை.தொழிலும் உற்பத்தியும் முடங்கி நம் பொருளாதாரமும் இழக்கத்தேவை இருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.