ETV Bharat / city

தலைவி அரசியல் படம் இல்லை - விஜய் விளக்கம்

author img

By

Published : Sep 5, 2021, 7:38 AM IST

Updated : Sep 5, 2021, 10:14 PM IST

தலைவி அரசியல் திரைப்படம் இல்லை; ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் மட்டுமே என இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.

Thalaivi movie
Thalaivi movie

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்த தலைவி திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகர்கள், அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத், தம்பி ராமையா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காயத்ரி ரகுராம், "இந்த படத்தின் பாடல்களுக்காக மூன்று மாதம் கங்கனா ரணாவத் உடன் பணியற்றியுள்ளேன்.

அடிப்படையில் தொழில் முறை நடனக்காரர் இல்லை என்றாலும் கூட நடனத்தை அடிப்படையில் இருந்து கற்றுக்கொண்டார். தை தை என நடனத்தில் ஆரம்ப நிலையில் இருந்து பயிற்சி எடுத்து கொண்டார். ஆனால் திரையில் அற்புதமாக நடனமாடியுள்ளார்" என தெரிவித்தார்.

ஏ.எல்.விஜய்

முதலமைச்சருக்கு தம்பி ராமையா கோரிக்கை

பின்னர் பேசிய நடிகர் தம்பி ராமையா, "கரோனா முதல் அலைக்கு பிறகு சினிமாவை பார்ப்பதற்கு மக்கள் திரையரங்கிற்கு வருவார்களா என்ற கேள்விக்கு மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மக்கள் வருவார்கள் என நிரூபித்தது. தற்போது இரண்டாம் அலைக்கு பின்னர் தலைவி படம் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் என நம்புகிறேன். நடிகர் அரவிந்த்சாமி மிகுந்த தன்னடக்கம் உள்ளவர். அவரின் அழகும் அறிவும் எனக்கு இருந்திருந்தால் ஒன்று ஜெயிலுக்கு சென்றிருப்பேன் அல்லது இறந்து இருப்பேன்.

தம்பி ராமையா

இயக்குநர் விஜய், வட இந்திய பெண்ணை இங்கே கொண்டு வந்து தமிழ் பேசவைத்து நமது தலைவர்களை வணங்கும் படி செய்துள்ளார். சாதி மதம் இனம் என அனைத்தையும் கடந்து மக்கள் ஒன்றாக கூடும் இடம் திரையரங்கு தான். ஆனால் இந்த கரோனாவிற்கு பின்பு பல திரையரங்குகள் இடிக்கப்படுகின்றன.

அவை கடைகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறி வருகின்றன. அனைத்து தரப்பு மக்களையும் உற்று கவனிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், இதில் தலையிட்டு திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்து திரையரங்கை காப்பாற்ற வேண்டும். திரையரங்குகள் காப்பாற்றப்பட்டால் திரைத்துறை காப்பாற்றப்படும். இது முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்" எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் அரவிந்த் சாமி,"எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. தம்பி ராமையா உள்ளிட்ட பல்வேறு நபர்கள் என்னை பாராட்டினார்கள் இந்த பாராட்டுக்கு தகுதியானவனா என்று எனக்கு தெரியவில்லை.

இருப்பினும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் திரைத்துறையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்ற எனக்கு நம்பிக்கை உள்ளது" என தெரிவித்தார்.

அரவிந்த் சாமி

வாழ்வின் சிறந்த படம்

பின்னர் பேசிய கங்கனா ரனாவத்,"இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன். கரோனாவிற்கு பிறகு வெளியாகும் படம். இதுவரை நான் நடித்த படங்களிலேயே தலைவியே சிறந்த படமாக இருக்கும் என நம்புகிறேன். மக்களை போலவே நானும் இந்த படம் வெளியவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

திரைப்படத்தில் நடித்த அனைவரும் அவரவர்களின் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரையும் இயக்குநர் சரியாக தேர்ந்தெடுத்துள்ளார். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி" என்றார்.

கங்கனா

இறுதியாக பேசிய படத்தின் இயக்குநர் விஜய், "இந்த படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரகனி இவர்கள் நான்கு பேரும் இயக்குநர்கள், இயக்குநர்களை வைத்து படம் எடுப்பது சுலபமல்ல.

ஆனால் இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இது அரசியல் படம் இல்லை. முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் மட்டும் தான்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Sep 5, 2021, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.