ETV Bharat / city

தமிழ்நாட்டில் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் - அரசு அறிவிப்பு

author img

By

Published : Apr 28, 2022, 9:02 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் - அரசு முதன்மைச் செயலாளர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் - அரசு முதன்மைச் செயலாளர் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதிகிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

"மே 1 (தொழிலாளர் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப் பொருட்கள் உள்ளன.

ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN ABHIYAN) மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30.ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும்.கோடை வெயிலின் காரணமாகக் கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இயங்காத பிஎஸ்என்எல் தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.