ETV Bharat / city

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம்

author img

By

Published : Oct 2, 2022, 4:58 PM IST

Updated : Oct 2, 2022, 5:10 PM IST

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கியதில் தமிழ்நாடு அரசு முதலிடம் பிடித்துள்ளது.

d
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீதத்திற்கும் குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு, கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கிட, தமிழ்நாடு அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டனர்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதில், சில பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால், 2 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் தமிழ்நாடு அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம்

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு (55 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்ட ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளூர் நீர் ஆதாரம் நிலையாக உள்ள ஊரகப் பகுதிகளில் ஒற்றை கிராமத் திட்டங்களை செயல்படுத்தவும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் நிலைத்தன்மை இல்லாத இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுரை வழங்கி உள்ளார்.

அதனடிப்படையில் மீதமுள்ள 55.79 லட்சம் வீடுகளுக்கு பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஒற்றைக் கிராமத் திட்டங்கள் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர் திட்டங்களும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுக் குடிநீர் திட்டங்களின் நீடித்த நிலைத் தன்மையை உறுதி செய்ய, காவிரி, கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தில், ரூ.2,400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களை சிறப்பாக பராமரித்து, தானியங்கு முறையில் இயந்திரங்களை நிறுவி விரைவாக குடிநீர் வழங்குவதற்கு, ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டு, அதனை பயன்படுத்தி அருகில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்புவதற்கு திட்டங்கள் செயல்படுத்த, ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திமுக ஆட்சியும் தெளிவில்லை, அமைச்சர்களும் தெளிவாக இல்லை' - ஜெயக்குமார் அதிருப்தி!

Last Updated :Oct 2, 2022, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.