ETV Bharat / city

திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்துங்கள் - ஸ்டாலினுக்கு அண்ணாமலை அறிவுரை

author img

By

Published : Jan 19, 2022, 1:09 PM IST

திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாட்டு மக்களும், சமூக ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் துணிச்சலுடன் தாங்கள் தந்த பொங்கல் பரிசு... நலக்கேடு தரும் கலப்படமிக்கதாக இருப்பதை வெளிச்சப்படுத்திப் போராடிவருகிறார்கள்.

  • மிளகில் பப்பாளி விதை
  • மிளகாய்த் தூளில் மரத்தூள்
  • நசத்துப்போன வெல்லம்
  • சாறு இல்லாத காய்ந்த கரும்புகள்

என்று கலப்படமும், தரக்கேடும், தாமதமும், குறை பொருளும் மக்களின் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும்போதே, அதிலிருந்து தப்பிக்க தங்களின் வழக்கமான நடைமுறையான மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி தாங்கள் மக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க எடுத்திருக்கும் இந்த முயற்சி பலனளிக்கப்போவதில்லை.

மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்களே!

வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் வாகனம் பங்குபெறத் தகுதி அடிப்படையில் தேர்வுபெறாத செய்தியை தவறாகச் சித்திரிப்பதைக் கண்டித்து பின்வரும் விஷயங்களை மனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  1. மகாகவி சுப்ரமணிய பாரதி தலைசிறந்த தேசியவாதி, தீவிரமான ஆன்மிகப் பற்றுமிக்கவர். அவர் கனவுகண்ட அகண்ட பாரதம்; அதுவே பாரதிய ஜனதா கட்சியின் தாரக மந்திரம். இந்த ஒவ்வாமையால்தான் நீங்கள் பாரதியைவிட பாரதிதாசனை அதிகம் கொண்டாடினீர்கள்.
  2. மகாகவி சுப்ரமணிய பாரதியார் திமுகவின் கொள்கைகளுக்கு எதிரானவர். இப்போது திமுக அரசு நடைமுறைப்படுத்தும், இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழிப் பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் அவர் எதிர்த்து நின்றார். நீங்கள் அவரைக் காட்சிப்படுத்த வேண்டிய சூழலில், அவர் நெற்றியில் அணிந்திருந்த திருமண் திலகத்தைத் தவிர்த்துவிட்டீர்கள், அதை அவர் விரும்பியிருக்க மாட்டார். அவர் எப்போதும் தன்னை பாரதத் தமிழனாக அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். அவரைத் திலகத்துடன் உருவப்படுத்துங்கள்.
  3. வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம், குயிலியின் தியாகம் மிக்க வாழ்க்கை, எந்த ஒரு சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் தலைமைக்கு உயர்த்தும் தகுதிமிக்கது. நீங்கள் மரபுரிமையாக அனுபவிக்கும் தலைமைப் பொறுப்பை அடைய 'ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில்' பிறக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் நிரூபித்தனர்.
  4. தன்னிகரற்ற தேசியவாதியாக இருந்த சிறந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, தீவிரமான தேசப்பற்று மிக்கவர். அவர் எப்போதும் 'தனி மாநிலம்' பற்றி பேசவில்லை! நாட்டிற்காக எடுத்த, உறுதியான நிலைப்பாட்டிற்காக அவர் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். அவருடை ஆன்மிக ஆளுமையையும், தெய்வீகத் தன்மையையும் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அவர் பெற்ற உத்வேகத்தையும் மறைக்கு முடியுமா, மறுக்க முடியுமா?

ஐயா, இறுதியா ஒரு வார்த்தை 1967இல் தொடங்கிய திமுக ஆட்சிக் காலத்திலிருந்து என் பள்ளி பிள்ளைகளுக்கு உள் நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றைத் தானே வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள்.

உதாரணமாக தமிழ் தெய்வ வணக்கம் என்ற தலைப்பிலே மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய வாழ்த்துப் பாடலில்,

பல்லுயிரும் பலவுலகும் படத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

போன்ற உயிரோட்டமான வரிகளை எல்லாம் நீக்கிவிட்டு உங்களுக்குத் தோதான வரிகளை மட்டும்தானே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக மாற்றினீர்கள். தமிழை தெய்வமாக நாங்கள் வணங்குவதுபோல நீங்கள் வணங்க விரும்பவில்லை. தமிழிலிலிருந்து தோன்றிய உயர் சிறப்புமிக்க பிற தென்னிந்திய மொழிகளையும் ஒதுக்கினீர்கள், தமிழுக்கு இருக்கும் உயர்தனிச் செம்மை சிறப்பை தாங்கள் விரும்பவில்லை போலும்.

இதுபோல, உங்கள் காலத்திலிருந்து தொடங்கும் எடிட் செய்யப்பட்ட வரலாறுகளைத் தவிர்த்து எங்கள் பள்ளிப் பாட நூல்களில் சொற்களில் உண்மை வைத்து வரலாற்றை எழுத வைத்து இந்த மாமனிதர்களின் வாழ்க்கையை பள்ளிச் சிறார்கள் படிக்கத் தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இறுதியா ஐயா ஒரு நினைவூட்டல்...

  • ஜனவரி 26ஆம் தேதி நம் நாட்டின் குடியரசு தினமே தவிர நமது சுதந்திர தினம் அல்ல!

இவ்வாறு பல விவரத்தைச் சுட்டிக்காட்டி அறிக்கையை நிறைவுசெய்துள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க: வேதனையில் டெல்டா விவசாயிகள்: துயர் துடைக்குமா தமிழ்நாடு அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.