ETV Bharat / city

நெல்லை கல்குவாரி விபத்து: காயமுற்றவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம்

author img

By

Published : May 15, 2022, 2:31 PM IST

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு லட்சம் நிவாரணம்
ஒரு லட்சம் நிவாரணம்

சென்னை: முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று (மே.14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளத்தில் சிக்கிய கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகியோர் மீட்பு படையினரால் உயிருடன் இன்று (மே.15) மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று (14.5.2022) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் (முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார்) சிக்கியுள்ளனர்.

அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். மேலும், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கிட ஆணையிட்டுள்ளேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து: 4 பேரை மீட்பதில் கடும் சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.