ETV Bharat / city

மகளிர் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை: நல்லதொரு அறிவிப்புக்காக காத்திருப்பு!

author img

By

Published : Dec 30, 2021, 12:13 PM IST

Updated : Dec 30, 2021, 1:34 PM IST

தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மகளிர் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படுவதில்லை. இதனால் உயர் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய மகளிர் கௌரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மகளிர் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை
மகளிர் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 149 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. சுமார் 5000-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவருகின்றனர்.

இங்குப் பணியாற்றக்கூடிய மகளிர் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுவதில்லை. இந்திய மாநிலங்களிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் மகப்பேறு விடுமுறை சம்பந்தமாக அரசிடம் கோரிக்கைவைத்ததற்கு, தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணியாற்றும் மகளிர் பணியாளர்கள் 12 மாதம் ஊதியம் பெற்றால் மட்டுமே அரசாணை 91இன்படி மகப்பேறு விடுமுறை அளிக்க இயலும் எனக் கூறி நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து அரசுக் கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் தங்கராஜ் என்பவரால், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கோரிக்கை மனு நவம்பர் 6இல் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கினைப் பதிவுசெய்து மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வகையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய நபர்களுக்கு மாதத்திற்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் சில நாள்களுக்கு முன்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிகமாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணியாற்றக்கூடிய மகளிருக்கு மகப்பேறு விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இது சம்பந்தமாக நல்ல அறிவிப்பினை மகளிர் கௌரவ விரிவுரையாளர் நலனைக் கருத்தில்கொண்டு கூடிய விரைவில் உயர் கல்வித் துறை நல்லதொரு அறிவிப்பினை அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு - சென்னையில் 10000 போலீசார் பாதுகாப்பு

Last Updated :Dec 30, 2021, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.