ETV Bharat / city

தமிழ்நாடு இழந்த தமிழர் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் - ராமதாஸ்

author img

By

Published : Oct 31, 2021, 8:04 PM IST

அண்டை மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு தேவையான அரசியல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், RAMADOSS
ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் தொடர் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர்," இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வரைபடம் முழுமைபெற...

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் ஒன்பது வட்டங்களில் திருத்தணி தவிர மீதமுள்ள எட்டு வட்டங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அதேபோல், தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றை கேரளாவிடம் இழந்தோம்.

அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றனர். அந்தப் பகுதிகளை இணைப்பது பாலாறு, முல்லைப் பெரியாற்று பிரச்னைகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கும் உதவும். தமிழ்நாட்டின் வரைபடமும் முழுமையடையும்.

தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம்

'தமிழ்நாடு நாள்' குறித்த தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து விட்டு, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு தேவையான அரசியல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்றும் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் என ராமதாஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நவம்பர் 1ஆம் தேதியே 'தமிழ்நாடு நாள்' - போர்க்கொடி தூக்கும் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.