ETV Bharat / city

ஒடிசா தொழிலாளியின் காணாமல்போன ஒரு மாத குழந்தை மீட்பு

author img

By

Published : Jan 31, 2022, 8:53 PM IST

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் ஒரு மாதக் குழந்தையைப் பத்திரமாக மீட்டுக் கொடுத்த ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறைக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ரயில்வே
ரயில்வே

செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கட்டுமான தொழிலாளி ஹேமந்த். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கும் இவரது மனைவிக்கும் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஜனவரி 31ஆம் தேதியான இன்று காலை 10.30 மணியளவில் குடியிருப்பிலிருந்த தனது ஒரு மாதக் குழந்தையைக் காணவில்லை எனக் குழந்தையின் தந்தை ஹேமந்த், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒரு மாதக் குழந்தை காணவில்லை

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், காணாமல்போன குழந்தையை மீட்க அருகிலுள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் உள்ள காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

மேலும், இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல் துறையினரும் தனிப்படை அமைத்து குழந்தையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே மற்றொரு தனிப்படையினர் அவர் தங்கியிருந்த இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தையுடன் கைது

அப்போது, கட்டுமான பணியில் ஈடுபட்டுவந்த பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சு, அவரது மனைவி கோமலா ஆகியோரும் காணாமல் போயிருப்பதைக் கண்டு காவல் துறையினர் சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் மதியம் 1.30 மணியளவில் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் லால்பாக் விரைவு ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு தம்பதியினர் கைக்குழந்தையுடன் இருப்பதைக் கண்டு ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின்பேரில் காவல் துறையினர் விரைந்துவந்து விசாரித்தபோது, அது கடத்தப்பட்ட குழந்தை எனத் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையுடன் இருந்தவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ரயில்வே காவல் துறைக்குப் பாராட்டு

கைதுசெய்யப்பட்ட தம்பதியிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடத்தப்பட்ட மூன்றரை மணி நேரங்களில் குழந்தையின் புகைப்படம் கூட இல்லாமல் சாதுரியமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறைக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க: 'எனக்கும் ஒருமையில் பேசத்தெரியும்' - வார்டு பங்கீட்டில் இருந்து கடுப்பாக வெளியேறிய ஜோதிமணி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.