ETV Bharat / city

ஒமைக்ரான் பரவல் : தடையை மீறி கடற்கரைக்குச் செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

author img

By

Published : Jan 3, 2022, 8:17 AM IST

சென்னையில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடற்கரைக்குச் செல்லும் மக்களை காவல் துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

corona guidelines at chennai beach
கடற்கரைக்குச் செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னையில் ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுவரை 92 பேர் சென்னையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் அதிகரித்து வருவதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான தனிப்பாதையில் மட்டுமே அனுமதி என்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்த வண்ணம் இருந்தனர். பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள், தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை என திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஒரு சில பகுதியில் தடையை மீறி பொதுமக்கள் குவிந்ததால் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,594 பேருக்குக் கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.